எம்.ஜி.ஆர் மீது துப்பாக்கிச் சூடு: வெப் சீரிஸ் தயாரிக்கும் ராதிகா

politics

தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்த சம்பவம் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம். தொழில்ரீதியாக ஏற்பட்ட வாக்குவாதம், அதனால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு, தமிழக அரசியலை மாற்றிப்போடும் என அவர்களே எண்ணிப்பார்த்திருக்க முடியாத ஒன்று.
1967ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆரை அவரது ராமாபுரம் தோட்டத்து வீட்டில் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் தயாரிப்பாளரான வாசுவுடன் சந்தித்தார் எம்.ஆர்.ராதா.

‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் கால்ஷீட் விஷயமாக எம்.ஆர்.ராதாவும், எம்.ஜி.ஆரும் பேசிக் கொண்டபோது அது வாக்குவாதமாகி, கோபத்தில் எம்.ஆர்.ராதா கையோடு கொண்டு போயிருந்த துப்பாக்கியால் எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இருவருமே உயிர் பிழைத்துவிட்டாலும் எம்.ஜி.ஆரை சுட்ட குற்றத்துக்காக எம்.ஆர்.ராதாவுக்கு நான்கு ஆண்டுக் காலம் சிறை தண்டனை கிடைத்தது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து வெப் சீரீஸ் ஒன்றை தயாரிக்கப் போவதாக எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “என் தந்தை எம்.ஆர்.ராதா சர்ச்சைக்குரிய மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்களில் எம்.ஜி.ஆருக்கும், எனது தந்தைக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன். இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.
** இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *