தேர்தல் பணிகள் தீவிரம்!

politics

தமிழ்நாடு 15ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பிப்ரவரி 26 ஆம் தேதி அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி(நாளை) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 22 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3,585 ஆண் வேட்பாளர், பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு 16 வது சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு அணியும், அதிமுக தலைமையிலான ஒரு அணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. ஆனால், திமுக கூட்டணி-அதிமுக கூட்டணி இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் முடிந்தது. இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை( 6.04.2021)வாக்குப்பதிவு தொடங்குவதையடுத்து, இன்று காலை முதல் தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் துணை ராணுவத்தினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1.20 இலட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அது மட்டுமல்லாமல் 300 கம்பெனி துணை இராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும். பின்னர், பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடத்தில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்படும். மே மாதம் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் மொத்தமாக 6 கோடியே 28 இலட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 92 இலட்சத்து 3 ஆயிரத்து 651 பேர் உள்ளனர். பெண்கள் 3 கோடியே 19 இலட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 192 பேரும் உள்ளனர்.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க கூடியவர்கள் 13 இலட்சத்து 83 ஆயிரத்து 610 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக ஒட்டுமொத்தமாக 1 இலட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன் 1லட்சத்து 14,205 கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய 1லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன. இதுதவிர, 20 சதவீதம் மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் என சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, நேரடியாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் பணிகள் நடந்து வரும் நிலையில், வாக்களிக்கப் பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *