Xஅப்போலோவுக்கு எதிராக தமிழக அரசு!

politics

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் ஒருதலைபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று வாதிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போலோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

இவ்வழக்கில் கடந்த விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்போலோ தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக அரசு சொன்னதால்தான் மருத்துவமனையிலிருந்த சிசிடிவிகளை அகற்றியதாகவும் கூறியது.

தொடர்ந்து இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு இடம் பெறாததால் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அப்போது அரசு தரப்பில் அப்போலோ நிர்வாகம் இவ்வழக்கைத் திசை திருப்ப முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கு நேற்று (நவம்பர் 17) மீண்டும் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி,

“ஆறுமுகசாமி ஆணையம் செயல்பாடுகள் பாரபட்சமாகவும் இயற்கை நீதியின் கொள்கை விதிகளை மீறும் வகையிலும் உள்ளது. விசாரணை ஆணையத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் எந்த தயக்கமும் எங்கள் தரப்பில் காட்டப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களும் ஆவணங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் சாட்சிகளிடம் நடத்திய விசாரணை முறையும், ஊடகங்களுக்கு விதிகளை மீறும் வகையில் தகவல்களை அளித்ததும் பாரபட்சமான செயல். ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பு என்பது ஒரு உண்மை கண்டறியும் குழு தானே தவிர, தீர்ப்பு வழங்கும் குழு அல்ல என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை இந்த ஆணையத்தில் 143 அமர்வுகள் விசாரிக்கப்பட்டுள்ளன. அப்போலோ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு உரிய பதிலைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளோம். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். அப்போலோ நிர்வாகம் கூறியது சாதாரண குற்றச்சாட்டுகள் அல்ல. ஆறுமுகசாமி ஆணையத்தை முந்தைய அரசு அமைத்து இருந்தாலும் தற்போதைய அரசும் ஆணையத்தின் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறது. மனுதாரர் தரப்பில் ஆணையத்தில் மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டதே தவிர ஆணையத்தைக் கலைக்க வேண்டும் என்று கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் புதிய அரசும் இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே உள்ளதா அல்லது ஆணையத்தில் மாற்றங்கள் செய்ய விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தமிழக அரசு தரப்பில் இந்த ஆணையம் விட்டுப்போன விசாரணையை அதே இடத்திலிருந்து தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எனினும் இது தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அனைவரும் அவரவர் தரப்பின் வாதங்களை முன்வைக்கலாம் இறுதியில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *