e’பணம் கொடுத்தால், புகார் கொடுப்போம்’!

Published On:

| By Balaji

மதுரையில் குடியிருப்பு பகுதி ஒன்றில், வாக்குக்கு பணம் கொடுத்தால், தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம் என்று வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகையை பார்த்து அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றன. பண விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில் பண விநியோகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ”எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல” என மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் மக்களுக்கு பண பட்டுவாடா செய்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள சாந்தி சதன் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 3000-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்த வளாகத்தின் நுழைவு வாயிலில் தேர்தல் குறித்த எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில்” வாக்காளர்களுக்கு யாரவது பணம் கொடுக்க முயற்சி செய்தால்,தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்படும். வாக்குகளுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் ஜனநாயக விரோதம்! தேச விரோதம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியிருப்பு வளாக செயலாளர் பாலகுரு கூறுகையில், வாக்காளர்களை, தங்கள் வசம் கவருவதற்காக பல அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணத்தை வழங்குகின்றனர். வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதால் நேர்மையான அரசு உருவாவதில், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றது. அதனால்,‌ எங்களது குடியிருப்பு வளாகத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அனைவரது ஒப்புதலையும் பெற்ற பின்னரே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share