wNRC வேண்டாமே! :எடப்பாடிக்கு அன்வர் ராஜா கடிதம்!

Published On:

| By Balaji

மத்திய அரசின் NRC(தேசிய குடிமக்கள் பதிவேடு) திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி அன்வர் ராஜா முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எல்லா திசைகளிலிருந்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்புகள் குவிந்துகொண்டிருக்கும் சமயத்தில், அந்த சட்டம் நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த எம்.பி-க்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் மற்றும் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் பொது அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து திமுக சார்பில் கடந்த திங்கள் கிழமை(23.12.19) நடத்தப்பட்ட பேரணிக்குப் பிறகு, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான குரல்கள் அதிகரித்திருக்கிறது.

சமீபத்தில் அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினரும் முன்னாள் மந்திரியுமான அ.முகமது ஜான், ஜமாத்திலிருந்து நீக்கப்பட்டதாக தமிழக ஜமாத்துகளின் மூலம் அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க ஆளுங்கட்சியாக இல்லாத பல மாநிலங்களில் குடியுரிமை சட்டம் எதிர்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக அதனை ஆதரித்து வாக்கு செலுத்தியது கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து தங்களது தரப்பு கருத்தை அதிமுகவில் இருக்கும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலாளர் அன்வர் ராஜா “நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்துப் வாக்களித்ததற்கு அதிகமான வசவுகளை நாங்கள் பெற்றுவருகிறோம். எனவே, இந்த சமயத்தில் NRC-யை பற்றி பொதுவெளியில் எதுவும் பேசவேண்டாம் என நினைக்கிறேன். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு ‘தமிழகத்தில் NRC-யை அமல்படுத்தவேண்டாம்’ என்று கேட்டு கடிதம் எழுதியிருக்கிறேன். அதேசமயம், குடியுரிமை சட்டத்தில்(CAA) எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன்” என தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒடிசாவின் நவீன் பட்நாயக், பிகாரின் நித்தீஷ் குமார் மற்றும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட முதல்வர்கள், ‘எங்கள் மாநிலங்களில் NRC அமல்படுத்தப்படாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதேபோன்ற நிலைப்பாட்டினை தமிழகத்தின் முதல்வரான எடப்பாடி எடுக்கவேண்டும் என்பது குடியுரிமை சட்டத்தினையும், NRC சட்டத்தையும் எதிர்ப்பவர்களின் குரலாக இருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share