Zதிமுக பேரணி: திரண்டது எத்தனை பேர்?

Published On:

| By Balaji

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகள் இணைந்து இன்று (டிசம்பர் 23) சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடத்திய பேரணி பிரம்மாண்டமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு இடையிலும் திமுக கூட்டணிக் கட்சிகளின் இந்தப் பேரணியில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததால் ஸ்டாலின் உற்சாகத்தில் இருக்கிறார். இந்த பேரணியை மத்திய உளவுத்துறையினரும், மாநில உளவுத்துறையினரும் போட்டி போட்டுக் கொண்டு கண்காணித்தனர்.

திமுக பேரணியில் வன்முறை நடக்கும் என்று பாஜகவின் ஹெச்.ராஜா போன்றவர்கள் கருத்துகள் தெரிவித்திருந்த நிலையில் , பிரம்மாண்டமான இந்த பேரணியில் ஒரு காகிதக் கிழிப்போ, கொடும்பாவி எரிப்போ எதுவும் நடக்கவில்லை. பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது, பேரணி அமைதியாய் முடிந்தது ஆகிய இரு அம்சங்களே ஸ்டாலினுக்கு உற்சாகத்தை தந்திருக்கின்றன.

பேரணி நிறைவுற்ற அடுத்த கணத்தில் இருந்தே இதில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை எத்தனை என்ற விவாதம் எழ ஆரம்பித்துவிட்டது.

மத்திய உளவுத்துறை திமுக பேரணிக்கு 35 ஆயிரம் பேர் வரை திரண்டதாக கணக்கெடுத்து வீடியோக்களோடு டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. மாநில உளவுத்துறையோ 20 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டிருக்கக் கூடும் என்று சொல்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்களோ, “போலீஸே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை குவிக்கப்பட்டால் தொண்டர்கள் எத்தனை பேர் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். 50 ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள்” என்கிறார்கள்.

இப்பேரணியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று திமுக தலைமைக்கு மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து தகவல் போயிருக்கிறது. அதேநேரம் கம்யூனிஸ்டு கட்சியின் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேரணிக்கு பெரிய பலமாக இருந்தார்கள் என்ற தகவலும் ஸ்டாலினை அடைந்திருக்கிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share