சென்னையில் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (டிசம்பர் 23) பிரம்மாண்டப் பேரணி நடத்தின. இந்த பேரணி, போர் அணியாக இருந்தது என்று ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் இப்பேரணிக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றி ஆலோசிக்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில் நேற்று சென்னை பேரணியின் வெற்றி பற்றி தகவல் அறிந்த பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர்,
“உள்ளாட்சித் தேர்தல் பணிகளால் பல மாவட்டங்கள் இந்தப் பேரணியில் பங்கேற்க இயலவில்லை. எனவே சென்னையைப் போலவே மதுரை, திருச்சி, கோவை அல்லது முதல்வர் எடப்பாடியின் மாவட்டமான சேலம், திருநெல்வேலி ஆகிய மையங்களில் திமுக சார்பில் சென்னை போலவே பேரணி நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இந்தப் பேரணிகள் நடத்த வேண்டும். இப்படிப்பட்ட பேரணிகளால் திமுகவுக்கும் மக்களுக்குமான நெருக்கம் இன்னும் அதிகமாகும்” என்று ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கோரிக்கையைக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின் பதில் ஏதும் சொல்லவில்லை என்கிறார்கள்.�,