10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பயிற்சி!

politics

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக இன்று (மே 6) சட்டப்பேரவையில் 33 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

அதில், ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்குத் துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவிகிதம் மானியம் ரூ.23.37 கோடி செலவில் வழங்கப்படும்.

வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வழங்க மானியம் வழங்கப்படும்.

2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.50 கோடி செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயத் தொழிலாளர் நிலம் வாங்க 10 கோடி ரூபாய் செலவில் மானியம் வழங்கப்படும்.

பழுதடைந்துள்ள 10 ஆதிதிராவிடர் மற்றும் பள்ளி மாணவர்கள் விடுதிகளுக்கு 45.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டப்படும்.

வாடகை கட்டடங்கள், பழுதடைந்த கட்டடங்களில் இயங்கி வரும் 5 ஆதிதிராவிட மாணவர்கள் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆறு மேல்நிலைப் பள்ளிகள் 16.26 கோடி ரூபாய் செலவில் மாதிரி பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

11 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

83 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு 10.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரவ மாடுகள் வாங்க 2.24 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்குத் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க 90 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் 1 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்குத் தொழில்நுட்ப பொருளாதார ஆய்வு மூலம் 1 கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும்.

7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் புதிய சமையல் அறைகள் கட்டப்படும்.

126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும்.

பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருளான உன்னிகுச்சி மூலம் தளவாட பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்.

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.

அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாச்சாரங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஒலி ஒளி ஆவணமாகப் பதிவு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *