ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைகிறார்.
கர்நாடக மாநிலத்தில் 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் கரூரைச் சேர்ந்த அண்ணாமலை. கடந்த வருடம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடைய 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். வலதுசாரி, மோடி ஆதரவாளர் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட இவர், ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் பேசப்பட்டது. அதுபோலவே தன்னுடையதும் ஆன்மீக அரசியல்தான் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்.
புதிய கல்வி கொள்கை, இடஒதுக்கீடு உள்பட பல விவகாரங்களில் அண்ணாமலை அளித்த பேட்டி, பாஜகவின் குரலாகவே ஒலித்தது. இவர் தெரிவித்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்றெல்லாம் அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் பாஜகவில் இணையும் முடிவை தற்போது எடுத்துள்ளார் அண்ணாமலை.
இன்று (ஆகஸ்ட் 25) மதியம் 1 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜகவில் இணைகிறார். இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, “நாட்டின் மீது அக்கறை கொண்டவன் நான். நாடு, தேசம் என நினைக்கக் கூடியவன். அதனால்தான் ஐ.பி.எஸ் ஆனேன். தமிழகத்தில் தற்போது ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது என்பது என்னுடைய பணிவான கருத்து. அதனை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**எழில்**�,