தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத மோதல்களை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு.
சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகளின் வாட்ஸ்அப் குரூப்பில் ஓர் ஆடியோ மெசேஜை வெளியிட்டிருந்தார்.
அதில், ” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டால் அவர்களின் கோபம் பாஜக நிர்வாகிகள் மீது திரும்பும். எனவே பாஜக நிர்வாகிகள் இன்னும் மூன்று மாதங்களுக்கு கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு செயலாளர் நாகூர் மீரான் மற்றும் அந்த அமைப்பின் மாநில நிர்வாகிகள் இன்று ஏப்ரல் 18ஆம் தேதி டிஜிபி அலுவலகத்திற்கு சென்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் கொடுத்தவர்கள் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோவுக்குப் பின்னால் பெரிய சதித் திட்டம் இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. எனவே அண்ணாமலையை கைது செய்து பாஜக என்ன திட்டமிட்டிருக்கிறது என்று விசாரணை செய்து அதை மக்கள் மன்றத்திலே தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக காவல்துறை இயக்குனரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் நாகூர் மீரான்.
.**வேந்தன்**