tபாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு முக்கிய பதவி!

Published On:

| By Balaji

பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு மாநில அளவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 10 வருடங்களாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து வந்த அண்ணாமலை, கடந்த 25ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதன்பிறகு கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, எந்த பதவியையும் எதிர்பாராமல் சாதாரண தொண்டனாகவே கட்சியில் இணைந்துள்ளதாகவும், கட்சி அளிக்கும் பணியை சிறப்பாக செய்வேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாஜகவில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளேயே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படுகிறார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. தமிழக பாஜகவில் தற்போது வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட 10 பேர் மாநில துணைத் தலைவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share