சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது: சி.வி.சண்முகம்

Published On:

| By Balaji

சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதுபோன்ற முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் துணைவேந்தர் சூரப்பா என்ன மற்றொரு முதல்வரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த அரசியல் கட்சிகள், அவரை டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தியது.

தனிப்பட்ட முறையில் தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை எனத் தெரிவித்த சூரப்பா, “மாநில அரசுக்கு தெரியாமல் நான் எந்த கடிதத்தையும் மத்திய அரசுக்கு எழுதவில்லை” என்றும் விளக்கம் அளித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தன்னிச்சையாக செயல்படும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் முன்பு திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கிண்டி அண்ணா பல்கலை முன்பு இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இடஒதுக்கீடு, மாநில நிதி உரிமைக்கு எதிரான சூரப்பாவை மாநில அரசு டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், பல்கலைக் கழகத்தை காவி மயமாக்கும் முயற்சியிலிருந்து பாதுகாக்க வேண்டுமெனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது பேசிய உதயநிதி, “பல ஆண்டுகளாக அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கி வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு இவர்கள் உயர் சிறப்பு அந்தஸ்து கொடுக்கிறார்களாம். தற்போது ஒரு மாணவர் பொறியியல் படிப்பதற்கு 4 வருடங்களுக்கும் சேர்த்து 2 லட்சம் ரூபாய்தான் ஆகிறது. ஆனால், சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் அது வருடத்திற்கு 2 லட்சம் என்கிற அளவுக்கு உயரும். இது கைவிடப்படவில்லை எனில் பல்கலைக் கழகத்திற்கு வெளியே நடக்கும் ஆர்பாட்டம் விரைவில் உள்ளே நடைபெறும்” என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “ அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ள சூரப்பா, அவருக்கு மேல் வேந்தர், அரசும் உள்ளதை மீறி, மத்திய அரசைத் தொடர்புகொண்டு, பல்கலைக்கழகத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்வதாகவும், அதற்கான ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதை எப்படிச் செய்வார் என்று தெரியவில்லை. சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமானது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாதகம் விளைவிக்கிற செயலை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share