uகாவிக் கொடி கட்டி அண்ணா சிலையும் அவமதிப்பு!

Published On:

| By Balaji

கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி கவச வரிகள் தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி இந்து அமைப்பினர், பெரியாரிய உணர்வாளர்களிடையே கருத்து மோதல் நிகழ்ந்து வந்தது. இப்படியிருந்த நேரத்தில் கோவையில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பின் அருண் கிருஷ்ணன் என்பவர் போலீசில் சரணடைந்தார். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே புதுச்சேரி-வில்லியனூர் பகுதியிலுள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவினர் இதற்கு தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். சில நாட்களுக்கு முன்பு கல்வராயன் மலையில் பெரியார் நீர் வீழ்ச்சி பெயர் பலகை மீதும் காவி சாயம் பூசப்பட்டது.

இந்த நிலையில் தந்தை பெரியார், எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து அண்ணா சிலையும் அவமதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடம் அருகே நேற்று (ஜூலை 29) நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் காவிக் கொடியை கட்டியுள்ளனர். பழைய சீரியல் பல்பு, சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் ஆகியவையும் அண்ணா சிலையின் மீது வீசப்பட்டுள்ளது. தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று காவிக் கொடி உள்ளிட்ட பொருட்களை அகற்றினர். மேலும், பதற்றத்தைத் தணிக்க அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கன்னியாகுமரி, குழித் துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம். தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள். குற்றவாளிகளைக் கைது செய்க” என்று வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன.மேலும் மேலும் இதுபோன்ற காலித் தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும்.மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share