தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். சில நாட்கள் கழித்து கடலிலோ அல்லது ஆறுகளிலோ அந்த விநாயகர் சிலை கலைக்கப்பட்டுவிடும். எனினும், கொரோனாவை பரவல் காரணமாக தற்போது கோயில்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படாத நிலை உள்ளது.
மேலும், பொது விழாக்களை தவிர்க்கவும், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து 17 இந்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் கடந்த 5ஆம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் சுருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்திட வேண்டுமெனவும், சிறிய திருக்கோவில்களில், பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், “இந்து வழிபாட்டு உரிமையை மீட்கும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விழா நடைபெறும்” என அறிவித்துள்ளார்.
**எழில்**�,