பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நீட் சட்டமுன்வடிவு: முதல்வர்!

Published On:

| By Balaji

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தது. அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான சூழல் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து அதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு பெற்றது.

இந்தச்சூழலில் நீட் தேர்வு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. குறிப்பாக இவ்விவகாரத்தில் மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் குழப்புகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார்.

இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் முதன் முறையாகப் பேசிய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆட்சியில் அதிமுக அரசு நீட் தேர்வைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வைத் தடுக்கும் முதல் படியாக முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு என்பது தமிழகத்தின் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதால் கட்சி பேதம் எதுவும் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இதனை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதோடு நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தான் நமது லட்சியமாக இருக்கும் என்று தெரிவித்தோம். அதுகுறித்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறச் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு அதனை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment