இதுவரை இல்லாத வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது குற்றம்சாட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ளவரும், அடுத்த தலைமை நீதிபதியாக வரப்போகிறவருமான என்.வி.ரமணா மீதுதான் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை ஜெகன் மோகன் ரெட்டியின் முதன்மை ஆலோசகர் அஜய கல்லம் அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட 8 பக்க கடிதத்தை வெளிப்படுத்தினார். அந்தக் கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டுக்கள் இவை.
* நீதிபதி என்.வி.ரமணாவும், தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் சந்திரபாபு நாயுடு இணைந்து எனது தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள்.
*நீதிபதி ரமணாவும், சந்திரபாபு நாயுடுவும் நெருக்கமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
*நான் இந்த கடிதத்தை மிகவும் பொறுப்புணர்வுடன் எழுதுகிறேன். நீதிபதி ரமணா, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தெலுங்கு தேசத்திற்கு எதிரான வழக்குகள் குறிப்பிட்ட அந்த சில நீதிபதிகளுக்கே ஒதுக்கப்படுகிறது.
*மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் என்.வி.ரமணா செல்வாக்கு செலுத்தினார்.
*சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடைய முந்தைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது ஆட்சி காலத்தில் நிலம் வாங்குவதற்கான சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு பெருமளவு செல்வத்தைச் சேர்த்ததாக ஜெகன் அரசாங்கம் குற்றம்சாட்டி, இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரியிருந்தது. ஆனால், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவிடாமல் உயர் நீதிமன்றம் தடுக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
*கடிதத்துடன், ஜெகன் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஏழு ஆவணங்களையும் இணைத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்தப்பட்ட வழக்கறிஞர்களின் தகுதி குறித்து சந்திரபாபு நாயுடு மற்றும் ரமணா வெளிப்படுத்திய கருத்துக்களின் அடையாளம் இருப்பதாகக் கூறி ஒரு ஆவணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் நீதித்துறையை அவதூறு செய்வதற்கான ஒரு ‘திட்டமிட்ட முயற்சி இது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆந்திர முதல்வரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்பது அவர்களது கருத்து. அக்டோபர் 6ஆம் தேதி அனுப்பப்பட்ட தனது கடிதத்தை பொதுவெளியில் பகிர்ந்ததற்குப் பதிலாக தலைமை நீதிபதி அளிக்கும் பதிலுக்காக ஜெகன் மோகன் ரெட்டி காத்திருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதற்கான காலத்தையும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரும் பொதுநல மனு ஒன்றை நீதிபதி என்.வி.ரமணா விசாரித்து வருகிறார். இதில் 31 வழக்குகளை எதிர்கொள்ளும் ஜெகன் மோகன் ரெட்டியும் அடக்கம். அவரது வழக்குகளில் 11 சிபிஐ வசமுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
**எழில்**
�,