mஇந்தியாவை இலங்கை அவமதிக்கிறது: அன்புமணி

Published On:

| By admin

இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமில்லாமல்,தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணியையும் இலங்கை அரசு செய்து வருகிறது.

மீனவர்களின் படகு ஏலம் விடும் நடவடிக்கைக்கு தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகையில், நேற்று எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்தது. இதையடுத்து, 16 மீனவர்களையும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை யாழ்ப்பாண சிறையில் அடைக்க ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் கைது என்பது இந்தியாவை இலங்கை அவமதிக்கும் செயல் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,”வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேர் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர்களின் காவல் 21ம் தேதி வரை நேற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்புகளை மீறி தமிழக மீனவர்களின் 135 படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் படகுகள் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் ஆகும்.

இந்திய-இலங்கை மீனவர் சிக்கலுக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை அமைச்சர் உறுதியளித்த ஒரு சில மணி நேரங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எவ்வாறு அவமதிக்கிறது என்பதை உணரலாம்.

இப்போது கைது செய்யப்பட்ட 16 பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21 பேர் என 37 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் ஏலத்தை தடுத்து நிறுத்தி அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசின் செயலால் கோபமடைந்த ராமேஸ்வர மீனவர்கள், இலங்கை அரசை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share