10 ஆண்டுகளில் 9 முறை அமைச்சர் பதவி மாற்றம்: அன்பில் மகேஷ்

politics

கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி 9 முறை மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020இல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1.20 லட்சத்துக்கும் மேல் உயர்ந்தது. இந்த ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வரும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நீட் தேர்வில் 180 கேள்விகள் கொடுக்கும்போது 174 கேள்விகள் தமிழகத்தின் பாடத்திட்டத்தில் எடுக்கப்பட்ட வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இரு மொழி கொள்கையாக இருந்தாலும், நீட் தேர்வாக இருந்தாலும் நல்ல பணிகளை அரசு ஆற்றுகின்ற போது அதற்கு அதிமுக துணையாக இருக்கும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை நல்லவிதமாகச் செலவு செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 9 முறை மாற்றப்பட்டுள்ளார். இசை நாற்காலி விளையாட்டு போல் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தையே காணவில்லை. அதை மீட்டெடுக்க வேண்டும்.

திராவிட மொழிகளிலேயே தொன்மை மொழியான தமிழின் வரலாறு, பண்பாட்டு மரபு, தமிழ்ச் சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வெளியீடாகக் கொண்டுவரப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல் போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள தலைசிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் சம்பந்தப்பட்ட படங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வெளியீடாக இரண்டு கோடி ரூபாய் செலவில் வெளியிடப்படும்.

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து 25,000 ரூபாய் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ்களுடன் கவிமணி விருது வழங்கப்படும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் அமைக்கப்படும்.

கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் எடுத்துச் செல்வதை இலக்காகக் கொண்டு நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும். சிலம்பம், மல்யுத்தம் போன்ற தற்காப்புக் கலை பயிற்சியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 35 கோடி ரூபாயில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.

பள்ளிகளில் அவசியமான பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு கல்வித் தகவல் மேலாண்மை முறைமை வாயிலாகப் பெறத்தக்க வகையில் மாற்றியமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *