மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு ஒரு திறந்த மடல்!

politics

வணக்கம்.

தமிழகத்தைச் சேர்ந்த கோடானுகோடிக் குடிமக்களில் ஒருவன் என்கிற முறையில் என் சகக் குடிமகனொருவரின் சார்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஏப்ரலில் உங்கள் கட்சிக்கு வாக்களித்து, தங்கள் தலைமையில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்களில், கொண்டிருப்பவர்களில் ஒருவனாகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

பல பத்தாண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘ஏழை பங்காளன் எமிலி ஜோலா’ என்ற நூலில் காணப்படும் உணர்வே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுமாறு தூண்டியது.

19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு ராணுவத்தைச் சேர்ந்த ‘ட்ரைஃபஸ்’ என்னும் யூதர், ஜெர்மனி அரசாங்கத்துக்கு உளவு பார்த்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்துத் துணிச்சலாகக் குரல் கொடுக்க வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா. சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழைகள், வேசிகள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோரின் அவலங்களைத் தன் இலக்கியப் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் எமிலி ஜோலா. ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்’ என்ற பொன் வாசகத்தை எழுதிய அறிஞர் அண்ணா, எமிலி ஜோலா நமக்கொரு சீரிய எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரைப் போற்றும் எழுத்துகளைத் தீட்டினார்.

நான் அறிஞர் அண்ணாவோ, எமிலி ஜோலாவோ அல்ல. அவர்களின் கால் தூசிக்குக்கூட ஈடாகாதவன் நான். எனினும், இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்த, பல்வேறு மனிதர்களின் சூழ்ச்சிகளால் பாரம்பரியச் சொத்துகளை இழந்த ஓர் ஏழையின் சார்பாக, அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட உணர்வுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சரிடம் புகார் தெரிவிப்பதற்காக உள்ள தொலைபேசி எண் 1100க்கு, அந்த ஏழைக் குடிமகனும் அவரது மனைவியும் தெரிவித்திருந்த எண்ணற்ற புகார்கள் ஒன்றுக்குக்கூட பதில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால்தான் அரைகுறைப் படிப்புடைய அல்லது எழுதப்படிக்கத் தெரியாத அவர்கள் சார்பில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

கோத்தகிரி வட்டம் அரவேனு கிராமத்தின் பகுதியான பங்களாடாவில் வீட்டு எண் 9/291இல் வசிக்கும் என்.ராஜு என்பவர்தான் அந்த ஏழை.

தனது பாட்டனாரின் சொத்தில் தனக்குரிய பாகப் பிரிவினை தொடர்பாக அவர் 2017ஆம் ஆண்டு தொடுத்த வழக்கு நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சிவில் சட்டங்களைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத எனக்கு, மிக சாதாரணமான வழக்கு – உரிய ஆவணங்களைப் பரிசீலித்து, அந்த சொத்துக்கு உண்மையான உடைமையாளர் யார் என்பதைக் கண்டறிந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய அந்த வழக்கு – இன்னும் ஏன் நிலுவையில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் நீதித் துறை மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது.

ஒரு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது அதில் தலையிடவோ, அதைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்கவோ யாருக்கும் உரிமையில்லை என்பதையும் நான் அறிவேன்.

எனினும் பண பலமோ, ஆள் பலமோ, அரசியல் பலமோ ஏதுமில்லாத என் சக குடிமகன் என்.ராஜுவின் சார்பில் நான் இக்கடிதத்தை எழுதுவது, நீதிமன்ற விசாரணையில் குறுக்கிடுவதாக அமையாது.

மாறாக, ஊழல், லஞ்ச ஒழிப்புக்காகத் தங்கள் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தரும் நம்பிக்கையின் அடிப்படையில், தங்கள் தலைமையிலுள்ள அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் செய்துள்ள அப்பட்டமான தவற்றைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

பாகப் பிரிவினைக்காக என்.ராஜு தொடுத்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டு வந்துள்ளன. கோத்தகிரி தாலுக்கா, கோத்தகரி கிராமம்-2 சர்வே எண் 22/26-1 உள்ள பட்டாவிலும் சிட்டாவிலும் என்.ராஜுவின் பெயர் 2015ஆம் ஆண்டு முதல் இடம் பெற்றிருந்தது. இந்த வழக்கு விசாரணை ஏறத்தாழ முடிவடையும் தறுவாயில் திடீரென்று 22.04.2021 அன்று அந்த சிட்டாவிலிருந்து என்.ராஜுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

அரசாங்க நடைமுறைகளின்படி, ஒருவரது பெயரை சிட்டாவிலிருந்தோ, பட்டாவிலிருந்தோ நீக்க வேண்டுமானால், அவருக்கு முறைப்படியான அறிவிப்புக் கொடுத்து, அவரை விசாரணை செய்து, தக்க ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அவர் பெயரை நீக்க முடியும்.

ஆனால், என்.ராஜுவுக்கு எந்த அறிவிப்பும் தரப்படாமல் முறைகேடாக அவரது பெயரை நீக்கியது, தன்னுடைய நிலம் என்று அவர் உரிமை கொண்டாடும் இடத்தில் அவரது வழக்கில் எதிர்த்தரப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளவர் கட்டிக்கொண்டிருக்கும் பெட்ரோல் வழங்கும் நிலையத்தை விரைவில் திறப்பதற்கான வழிகளிலொன்றாகவே உள்ளது என்பதையும், இதனை அரசாங்க நடைமுறைகளை மீறி கோத்தகிரி கிராமம் – 2 நிர்வாக அதிகாரியும் வட்டாட்சியரும் செய்திருக்கின்றனர் என்பதையும், அரசியல் செல்வாக்குள்ளவர்களின் நிர்பந்தமே இதற்கு காரணம் என்ற ஊகத்துக்கு இது இட்டுச் செல்கிறது என்பதையும் தங்கள் பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

என்.ராஜு தொடுத்துள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு பாதகமான தீர்ப்புகளை வழங்குமென்றால் அவற்றை கண்ணியமாக எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதையும் உணர்ந்துள்ள நான், இந்த வழக்குகள் நிலுவையிலுள்ளபோது, வருவாய்த் துறை அதிகாரிகள் முறைகேடாக அவரது பெயரை நீக்கியுள்ளது தொடர்பாக மட்டுமே இந்தப் புகாரைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதைத் திறந்த மடலாக எழுதுவதற்கு காரணம், இது போன்ற முறைகேடான செயல்கள், இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சராகக் கருதப்படும் தங்கள் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்… நிர்வாகச் செயல்பாடுகள் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற என் இதயம் நிறைந்த ஆசைதான்.

தங்கள் உண்மையுள்ள

எஸ்.வி.ராஜதுரை (மனோகரன்),

5/43, ஜே கார்ஸ்லி எஸ்டேட்,

அனையட்டி சாலை,

கோத்தகிரி 643 217

(**எஸ்.வி.ராஜதுரை** மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்)

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *