மத்திய அரசுப் பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க தமிழகத்தை சேர்ந்த துடிப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதாவுக்கு இப்பதவி கிடைத்துள்ளது.
தர்மபுரி, காஞ்சிபுரம் கலெக்டர், தமிழக உணவுப் பாதுகாப்பு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் துறை ஆணையர், தமிழக அரசின் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர், தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குநராகவும், தமிழக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உறுப்பினர் செயலாளர், தமிழக பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார், மேலும் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தில் திட்ட அலுவலர் என்று பல பதவிகளை வகித்தவர் அமுதா ஐ.ஏ.எஸ்.
அமுதா 2019 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூர்ன் அருகே முசூரி பகுதியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இப்போது பிரதமர் அலுவலகம் அமுதாவை இணைச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
**13 வயதில் கனவு 23 வயதில் ஐ.ஏ.எஸ்.**
மதுரையைச் சேர்ந்த அமுதா பின் தங்கிய சௌராஷ்ட்ரா சமூகத்தின் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் சுட்டியாக இருந்த அமுதா, “நான் நன்றாகப் படித்தேன். எந்தத் துறைக்கான படிப்பாக இருந்தாலும் என்னால் திறம்பட வெல்ல முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். ஆக ஆசைப்பட்டேன். என்னுடைய 13 வயதில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் கனவு கண்டேன். 23 வயதில் ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டேன்” என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.
**மணல் கொள்ளையர்கள், மழை வெள்ளம்**
1994 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த அமுதா தர்மபுரி கலெக்டராக இருந்தபோது சிறந்த கலெக்டருக்கான விருது பெற்றவர். **பின் தங்கிய மாவட்டமான தர்மபுரியில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துத் திறம்பட பணிகளைச் செய்தவர். காஞ்சி கலெக்டராக இருந்தபோது மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைளைத் தீவிரமாக மேற்கொண்டதால். கொள்ளையர்கள் அமுதாவை லாரியை மோதி கொல்ல முயற்சித்தனர். ஆனபோதும் மணல் கொள்ளையை கடுமையாக ஒடுக்கினார். 2015 சென்னை மழை வெள்ளம் மீட்பு சிறப்பு அலுலவராக இருந்த அமுதா களத்தில் இறங்கி கடுமையாகப் போராடி பலரைக் காப்பாற்றினார்.** அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் மறைந்தபோது அவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் அமைதியாக ஒழுங்காக நடைபெறுவற்கு விரிவான ஏற்பாடுப் பொறுப்புகளை ஏற்று செயல்படுத்தியவர் அமுதா. அதுவும் குறிப்பாக கருணாநிதி மறைந்தபோது எங்கே இறுதி நிகழ்ச்சி என்ற வினா எல்லார் மனதிலும் இருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்த பிறகு சில மணி நேரங்களே இருந்த நிலையில் மெரினா இடத்தை தயார் செய்து இறுதி நிகழ்வை அமைதியாக நடத்தியமைக்காக கருணாநிதி குடும்பத்தினர் அமுதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
**சுனாமிக் களத்தில் அமுதாவின் உன்னத சேவை**
கலெக்டர், உணவுப் பாதுகாப்பு முதன்மை அலுவலர், தமிழகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர் என்று தமிழக அரசுப் பணிகளில் இவ்வாறு என்றால்… ஐ.நா.சபையின் நீர் மற்றும் சுகாதாரத்துக்கான நிதியத்தின் திட்ட அலுவலராகவும் பணியாற்றினார். அந்தப் பணியில் அமுதா இருந்தபோதுதான் தமிழகத்தை சுனாமி தாக்கியது,
2004 ஆம் ஆண்டு டிசம்பரில் சுனாமி தாக்குதலை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டு நிறுவனங்களும், பொது அமைப்புகளும் உதவிக்காக வந்தனர். அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பது, தற்காலிக வீடுகள் அமைப்பது, உடைகளை வழங்குவது ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் யாருமே சுனாமிக்குப் பிறகான கடலோர மக்களின் சுகாதாரம், கழிவுகளை அகற்றுதல் பற்றி பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
நீர் மற்றும் சுகாதார திட்ட அதிகாரியாக இருந்த அமுதாவின் முதல் கவனமே சுகாதாரம் மீதுதான் திரும்பியது. இதை ஒரு பேட்டியில் அமுதாவே வெளிப்படுத்தியுள்ளார்.
“சுனாமி தாக்குதலுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் மக்கள் பள்ளிகள், அரசுக் கட்டிடங்கள், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு கழிவறை வசதி இல்லை. உணவு கொடுக்கப்படுகிறது, உடை, உறைவிடம் இருக்கிறது. ஆனால் கழிவறை வசதி அவர்களுக்கு இல்லை. மீனவ மக்கள் இயல்பாகவே காலைக் கடன்களை கழிக்க கடலோரம் செல்வார்கள். ஆனால் சுனாமிக்குப் பிறகு கடலைப் பார்க்கவே அவர்களுக்கு பெரும் அச்சமாக இருந்தது. அதனால் தற்காலிகக் குடியிருப்புகளைச் சுற்றியே மலம் கழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
சில நாட்களில் இது பெரும்பிரச்சினையாக மாறியது. சுனாமியால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளால் காலரா போன்ற தொற்று நோய் பரவி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களிடம் இதுபற்றிப் பேசினோம். குடியிருப்புகளைச் சுற்றியிருக்கும் மனிதக் கழிவுகளை அகற்ற உதவ வேண்டும் என்று நானே கேட்டேன். எந்த ஒரு என்.ஜி.ஓ.வும் அதற்கு உதவ வில்லை. வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறோம், இதைத் தவிர என்று மறுத்துவிட்டனர். இறந்து கிடக்கும் மனித உடல்களை அகற்றுவதற்கு தயாராக இருந்த அவர்கள், மனிதக் கழிவுகளை அகற்ற மறுத்துவிட்டனர்.
அப்போதுதான் மற்றவர்களை கேட்பதை விட நாமே இதை செயல்படுத்தி முன்னுதாரணமாக இருப்போம் என்று முடிவெடுத்தேன். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தன்னார்வலர்களை அழைத்தேன். இருபது பேர் வரை என்னுடன் வந்தார்கள். கிளவுஸ் அணிந்துகொண்டோம், முகக் கவசம் அணிந்துகொண்டோம், வாரி எடுக்கும் உபகரணங்களை எடுத்துக் கொண்டோம். நாங்களே மனிதக் கழிவுகளை அள்ளி அப்புறப்படுத்தி எரித்தோம். இந்தப் பணிதான் சுனாமிக்குப் பிறகான தொற்று நோய் மரணங்களைத் தடுத்து நிறுத்தியது. இதை என் பணியின் முன்னுதாரண அம்சமாக நான் கருதுகிறேன்” என்று எவரிடே லீடர்ஷிப் என்ற இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அமுதா மனம் திறந்து கூறியுள்ளார்.
**பொதுவாகவே பிரதமர் மோடி நிர்வாகத் திறமையுள்ள அதிகாரிகளை பருந்துப் பார்வையோடு கண்டறிந்து அவர்களை உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில், நிர்வாகத் திறமையும், அடித்தட்டு மக்கள் மீதான அக்கறையும்,இயல்பான தாய்மை குணமும் ஒருங்கே அமையப்பெற்ற ஐ.ஏ.எஸ்,. அதிகாரி அமுதா பற்றிய முழு தகவல்களையும் அறிந்து அதன் அடிப்படையிலேயே இந்திய நாட்டின் உயர்ந்த ஜனநாயக அலுவலகமான பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அமுதா.** தன் மக்கள் சேவையை செம்மையாகத் தொடர்வார் என்ற நம்பிக்கையோடு தமிழகத்தின் சேவைப் பெண் அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ்.சை வாழ்த்துவோம்!
**-ஆரா**
�,”