வெற்றி என இனி யாரிடம் பேசப்போகிறேன்: தினகரன் உருக்கம்!

Published On:

| By Balaji

அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை உயிரிழந்தார்.

வெற்றிவேல் மறைவையடுத்து அமமுக கொடிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்றும், அமமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “எனது இனிய நண்பர் வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா, சசிகலாவின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர்.

எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். ‘என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன்’ என்று உறுதிபடச் சொல்லி, இறுதிவரை அமமுக மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்” என்று புகழாரம் சூட்டினார்.

‘வெற்றி… வெற்றி’ என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத தன் உள்ளம் கலங்கித் தவிக்கிறது என்று உருக்கமாக குறிப்பிட்ட தினகரன், “வெற்றிவேல் மறைவு கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப்பயணத்தில் ‘வெற்றிவேல்’ என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்.

சென்னை மாநகர மேயராக நான் இருந்தபோது, மாநகர மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அடித்தட்டு மக்களின் குறைகளைத் தீர்க்கப் பாடுபட்டவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்குப் பலியாகியிருப்பது பெருந்துயரமாகும். மூப்பனார் மூலம் அறிமுகமான நாளிலிருந்து இதுநாள் வரையில் எம்முடன் கொண்ட நட்புறவைப் பேணி போற்றியவர். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடுகிற யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்” என விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார்.

பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன், “தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.P.வெற்றிவேல் மறைவு மிகுந்த வேதனையைத் தருகிறது. எளிமையான குடும்பத்தில் பிறந்து தனது கடுமையான உழைப்பால் பொது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்தவர். அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share