கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக பொருளாளருமான வெற்றிவேலுக்கு கடந்த வாரத்திற்கு முன்பு காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து, அக்டோபர் 6ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே கடந்த 9ஆம் தேதி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்துவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இன்று (அக்டோபர் 15) மாலை வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த வெற்றிவேல், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியை இழந்து சிறை சென்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியை தக்கவைக்க இடைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலை வந்தபோது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குச் சென்றார். அதிமுகவில் அணிகள் பிரிந்தபோது வெற்றிவேல், தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. அமமுக தொடங்கப்பட்டது முதல் அதில் இணைந்து பணியாற்றி வந்த வெற்றிவேல், தற்போது பொருளாளராக இருந்துவந்தார். கொரோனா பாதிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஊடக விவாதங்களில் பங்கேற்று வந்த நிலையில், அவரது மறைவு அமமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
**எழில்**�,