அமமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி ஆரம்பித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைதியாகவே அரசியல் பணிகளை மேற்கொண்டுவந்த தினகரன், தற்போது மிகத் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார். மாவட்ட ரீதியாக அமமுக ஆலோசனைக் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள் எனத் தொடர் பயணங்களில் பிசியாக இருக்கிறார்.
அமமுகவின் தலைமை அலுவலகம் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அவர் அதிமுகவில் இணைந்துவிட்டதால் அதை மாற்ற முடிவெடுத்தார் தினகரன். ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் அமமுக தலைமை அலுவலகத்துக்கென புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச் 12) நடைபெறுகிறது. அலுவலகத்தைத் திறந்துவைத்து கட்சியினருக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றவுள்ளார் தினகரன்.
இந்த நிலையில் அமமுகவின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அக்கட்சி வட்டாரங்களில் விசாரித்தோம்…
“அமமுகவில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பிசியாக நடந்துவருகிறது. மார்ச் 5ஆம் தேதி முதல் புதிய உறுப்பினர்களுக்கான சேர்க்கையைத் தொடங்கிவிட்டோம். ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் 33 பேரைச் சேர்க்க முடியும். தற்போது புதிய படிவம் 26 பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் உள்ளது. ஒரு வாக்குச் சாவடிக்கு 100 பேர் வரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று தலைமை இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
அதில் 25 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக 20,000 முதல் 25,000 வரையில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்த்து அதுதொடர்பான படிவங்களைத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் அசைன்மென்ட் கொடுத்துள்ளார்” என்கிறார்கள்.
இதுதொடர்பாக அமமுக மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசியபோது, “ஜூன் மாதத்துக்குப் பிறகு உறுப்பினர்களுக்குப் புதிய அடையாள அட்டை வழங்கப்படும். சின்னம்மா சசிகலாவை விரைவில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக சட்டரீதியான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சின்னம்மா வெளியே வந்ததும் அவர் கையால் உறுப்பினர் அட்டையை வழங்கும் திட்டத்தையும் தினகரன் கையிலெடுத்துள்ளார்” என்று கூறினார்.
**-வணங்காமுடி**
�,