[அமமுகவுக்கு புதிய தலைமை அலுவலகம்!

Published On:

| By Balaji

சென்னை ராயப்பேட்டையில் அமமுகவுக்கு புதிய அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

2018 பிப்ரவரி மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினை துவங்கிய டிடிவி தினகரன், அதே ஆண்டு ஜூன் மாதம் அசோக் நகர், டாக்டர் நடேசன் சாலையில் அமமுகவுக்கென தனி அலுவலகத்தை திறந்தார். இந்த அலுவலகக் கட்டிடம் அமமுகவில் இருந்து விலகி சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது. இதனால் அமமுக அலுவலகம் செயல்படுவதில் சிக்கல் உண்டானது.

இதுதொடர்பாக அப்போதே [டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/01/61) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இசக்கி சுப்பையா விலகிய பிறகும் அந்த கட்டிடம்தான் அமமுகவின் அலுவலகமாக செயல்பட்டுவந்தது. அந்த முகவரியிலிருந்துதான் அமமுகவின் அறிவிப்புகளும் வெளியாகின.

எனினும் அதிமுகவில் இணைந்தவரின் கட்டிடத்தில் தொடர்ந்து செயல்படுவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் ராயப்பேட்டைக்கு அலுவலகத்தை மாற்ற தினகரன் முடிவுசெய்தார். அதற்கான பணிகளும் வேகவேகமாக நடைபெற்றுவந்தன.

இந்த நிலையில் அமமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 6) வெளியிட்ட அறிவிப்பில், “ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை ஏந்திப் பிடிக்கும் உன்னத லட்சியத்தோடு இயங்கிவரும் அமமுகவின் தலைமைக் கழக புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் புதிய எழிலோடு உருவாக்கியிருக்கிறது. ஜெயலலிதாவின் நல்லாசியோடு வரும் 12ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அதன் திறப்பு விழா நடைபெறும். கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் அலுவலகத்தை திறந்துவைக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அலுவலகத்திற்கான பணிகள் நடந்துவரும் புகைப்படங்களை அமமுக நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share