டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு!

politics

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்… அனைத்து முக்கிய கட்சிகளும் பரபரப்பான தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

இந்த நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டல செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 27) பகல் ஒரு மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

25 ஆம் தேதி காலையே அக்கட்சியின் மண்டலச் செயலாளர்கள் அனைவருக்கும் இந்தக் கூட்டம் பற்றிய தகவல் அனுப்பப்பட்டது. 26 ஆம் தேதி மாலை தான் உள்ளாட்சி தேர்தல் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. அதையடுத்து இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அப்படி என்றால் 25ஆம் தேதி இந்த கூட்டத்திற்கான தகவல் மண்டல செயலாளர்களுக்கு சொல்லப்பட்ட போது கூட்டத்தின் அஜெண்டா என்ன என்ற கேள்வி எழுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கான உறுப்பினர் அட்டை விநியோகம் பற்றி விவாதிப்பதற்காக தான் மண்டல செயலாளர்கள் கூட்டம் முதலில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த விவாதமும் இன்றைக்கு மண்டல செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெறும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை 2018 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தொடங்கினார் டிடிவி தினகரன். அதன் பிறகு தன் கட்சிக்கு பொது சின்னம் கோரி அவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட போது அதற்கு ஆட்சேபம் ஏதும் இருக்கிறதா என தேர்தல் ஆணையம் பிற கட்சிகளிடம் கேட்டது.

அப்போது அதிமுக சார்பில் பதிவு செய்யப்படாத தினகரன் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்காக 2019 டிசம்பர் மாதம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையத்தில் தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்துமே அப்போது சிறையில் இருந்த சசிகலாவின் விருப்பமில்லாமல் தான் நடந்தன என்று தகவல்கள் வந்தன.

சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பலமுறை பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடுவது என்ற முடிவு எடுத்த நிலையில்… சசிகலா அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகும் கட்சியை தன் தலைமையில் ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று இன்றுவரை முயற்சி செய்து வருகிறார் சசிகலா.

அதற்காகவே டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்ததாகவும் அமமுக தரப்பில் முணுமுணுப்புகள் கேட்கின்றன. அத்தகைய கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் அமமுகவுக்கு உறுப்பினர் அட்டை அச்சடிக்க கூடாது என்பது.

கட்சி ஆரம்பித்து அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தேர்தலில் போட்டியிட்ட பின்னரும் உறுப்பினர் அட்டை விநியோகம் நடக்கவில்லை என்று அம்முவின் மாவட்ட செயலாளர்கள் பலமுறை ஏற்கனவே கேட்டிருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் பெரிய அளவு ரெஸ்பான்ஸ் செய்யாத டிடிவி தினகரன்… சில வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு உறுப்பினர் அட்டைகளை பிரிண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிரிண்ட் செய்யப்பட்ட அமமுக உறுப்பினர் அட்டைகள் தலைமை அலுவலகத்திற்கு நான்கு நாட்கள் முன்பு வந்து விட்டன.

இந்த உறுப்பினர் அட்டைகளை கட்சியினருக்கு விநியோகம் செய்வது பற்றி விவாதிப்பதற்காக தான் மண்டல செயலாளர்கள் கூட்டத்தை ஜனவரி 27ஆம் தேதி கூட்டியிருக்கிறார் தினகரன். ஆனால் 26 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிட்டதால் உறுப்பினர் அட்டை விவகாரத்தோடு உள்ளாட்சி தேர்தல் பற்றியும் இன்றைய கூட்டத்தில் சில முக்கிய ஆலோசனைகளை நடத்த இருக்கிறார் டிடிவி தினகரன்.

கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்குவது என்று தினகரன் முடிவெடுத்தது சசிகலாவின் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வரும் முயற்சிதான் என்கிறார்கள் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்.

‘ உறவு என்ற அடிப்படையில் எப்பொழுதுமே சசிகலாவுக்கு நெருக்கமானவர் டிடிவி தினகரன். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மிக நெருக்கமான பிணைப்பு களையும் சசிகலாவோடு கொண்டுள்ளார். அதேநேரம் அதிமுகவை ஒற்றுமை படுத்துவது என்ற சசிகலாவின் திட்டத்திற்காக எவ்வளவு நாட்கள்தான் காத்திருப்பது

என்றும் தினகரன் யோசிக்கிறார். பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகியோர் தரப்பிலிருந்து எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாத நிலையில்… தன்னை நம்பி வந்த நிர்வாகிகள் தொண்டர்களுக்காக

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது தான் தினகரன் எடுத்திருக்கும் முடிவு.

இதனை உறுதி செய்வதற்காக தான் உறுப்பினர் அட்டைகளை வழங்குவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதும் என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமானவர்கள்.

அதே நேரம்… ‘ சசிகலாவிடம் இருந்து முற்றிலும் விடுபட்டு தினகரனால் அரசியல் இயக்கம் நடத்த முடியுமா? பிள்ளைப் பெற்று விட்டு வளைகாப்பு நடத்துவது போல இருக்கிறது இப்போது உறுப்பினர் அட்டைகளை விநியோகிப்பது. சசிகலாவை விட்டு தினகரன் அரசியல் ரீதியாக விலக ஆரம்பித்தால் அதன் விளைவுகள் அமமுக கட்சியிலும் எதிரொலிக்கும்’ என்று மண்டல செயலாளர்கள் சிலரே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.