அமமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல்! தினகரன் பெயர் மிஸ்ஸிங்

Published On:

| By Balaji

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 10) காலை வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக கூட்டணியில் இதுவரை ஓவைசி கட்சிக்கு மூன்று இடங்களும், கோகுலம் மக்கள் கட்சி. மருது சேனை ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் என ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அக்கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.

இதில் அமமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தினகரன் போட்டியிடும் தொகுதி எது என்பது பற்றிய விவரம் இடம்பெறவில்லை.

அமமுகவின் துணைத் தலைவர் எஸ். அன்பழகன் ராசிபுரம் தனி தொகுதியிலும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பாப்பிரெட்டி பட்டி தொகுதியிலும், துணைப் பொதுச் செயலாளர்கள் ரங்கசாமி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலும், செந்தமிழன் சைதாப்பேட்டைதொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அமமுக பொருளாளர் ஆர். மனோகரன் ஸ்ரீரங்கம் தொகுதியிலும், தலைமை நிலையச் செயலாளர் சண்முக வேலு மடத்துக்குளம் தொகுதியிலும், அமமுக தலைமை நிலையச் செயலாளர் கே.கே. உமாதேவன் திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், வீரபாண்டி தொகுதியில் எஸ்.கே. செல்வம், உசிலம்பட்டியில் ஐ. மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் ஆர். துரைசாமி என்கிற சேலஞ்சர் துரை, அரூர் தொகுதியில் ஆர்.ஆர். முருகன், பொள்ளாச்சி தொகுதியில் சுகுமார், தர்மபுரி தொகுதியில் டி.கே. ராஜேந்திரன், புவனகிரியில் பாலமுருகன் ஆகியோரது பெயர்களும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், ரங்கசாமி, பார்த்திபன் , முருகன் ஆகிய நால்வர் இடம்பெற்றுள்ளார்கள்.

சென்னை, தென் மண்டலம். மேற்கு மண்டலம், டெல்டா மண்டலம் என பரவலாக இந்த 15 பேர் கொண்ட பட்டியல் இருக்கிறது.

முதல் பட்டியலில் கட்சிப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அமமுக தொண்டர்களிடம் இருந்தது.ஆனால் இப்பட்டியலில் டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி பற்றிய அறிவிப்பு இல்லை.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share