qஇரு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: தினகரன்

Published On:

| By Balaji

டிடிவி தினகரனை பொதுச்செயலாளராக கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாளை மார்ச் 15 ஆம் தேதி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

2018 மார்ச் 15ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் துவக்கினார் டிடிவி தினகரன். இன்று கட்சி துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவுற்று, நாளை மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. . இதை ஒட்டி கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய ஆட்சி  முடிந்தவுடன் அதிமுக நெல்லிக்காய் மூட்டையாக சிதறி விடும் என்றும் அதனால்தான் நாம் அமைதியாக இருப்போம் என்ற பொய்யை அதிமுக திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (மார்ச் 14) அவர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,

“அம்மா அவர்களின் பேரியக்கத்தையும், அந்த இயக்கத்திடம் இருந்த தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பையும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக துரோகிகள் அடகு வைத்தபோது அம்மாவின் உண்மைத் தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக்குமுறலின் வெளிப்பாடே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். நம் தாயின் திருப்பெயரை இயக்கத்தில் கொண்டு அவரின் திருவுருவத்தை தாங்கிய கொடியை, எனது ஆருயிர் நண்பன் மறைந்த மேலூர் ஆர்.சாமிக்குச் சொந்தமான இடத்தில் ஏற்றி வைத்து, மதுரை மேலூரில் மார்ச் 15, 2018ல் இந்த இயக்கம் முகிழ்த்து எழுந்தது. பணம், பதவி இவற்றை எல்லாம் துச்சமென நினைத்து அம்மா அவர்களின் கொள்கைகளைக் காப்பதும், அவர்கள் வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதுமே தலையாய கடமை என்ற எண்ணத்துடன் களமிறங்கிய நீங்கள் தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி” என்று குறிப்பிட்டிருக்கும் டிடிவி தினகரன்,

“நமது இயக்கம் முத்தான மூன்றாம் ஆண்டில் கால்பதித்திருக்கும் இந்த நல்ல நேரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நீங்கா நினைவுகள் காற்றலைகளில் கலந்திருக்கும் சென்னை, ராயப்பேட்டையில் நமக்கு புதிய தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ளது. இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியோடு இங்கிருந்து சட்டமன்றத் தேர்தல் வேலைகளைப் புத்தம் புது உற்சாகத்தோடு தொடங்கி இருக்கிறோம். பதிவு பெற்ற கட்சியாக ஒரே சின்னத்தில், வெற்றிச்சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம். அதற்கு முன்னோட்டமாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் வாகை சூடும் வகையில் நம்முடைய பணிகள் அமையவிருக்கின்றன. அவற்றில் நாம் பெறுகிற வெற்றி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு கட்டியங்கூறப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share