அதிமுக-அமமுக இணைப்பா? –பிஜேபி தலைவர் ஓப்பன் டாக்!

Published On:

| By Balaji

வரும் தேர்தலில் தமிழகத்தின் இரண்டு முக்கியக் கூட்டணிகளிலும் பெரிய மாற்றங்கள் நடக்கும், கட்சிகள் அணி மாறும் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில், அப்படி எந்த மாற்றமும் நடக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குப் பின்பு, திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிவிட்டது.

அதேபோன்று, சென்னைக்கு மோடி வந்து சென்ற பின்பு, அதிமுக கூட்டணியிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதும் முடிவாகிவிட்டது.

ஆனாலும் தேர்தலுக்கு முன், அதிமுகவுக்குள் அதிரடி மாற்றங்கள் நடக்கும், சசிகலா மீண்டும் இணைவார், அமமுகவும் அதிமுகவுடன் இணைக்கப்படும் என்று இன்னும் ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த மாற்றங்களை பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்து, சில நாள்களில் நிறைவேற்றும் என்றும் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தபின்பும் கூட, அதிமுகவில் அதிரடி மாற்றம் நிகழும் என்று அந்தக் கட்சியில் மட்டுமின்றி, திமுக கூட்டணியிலும் எதிர்பார்ப்புகள் எகிறியடிக்கின்றன. ஆனால் பிரதமர் மோடியின் சென்னை வருகை, இதுபோன்று எந்த மாற்றமும் இனி நடக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் அடித்துச் சொல்கின்றனர். இவர்கள் சொல்லும் தகவலை பாரதிய ஜனதா தரப்பிலும் உறுதி செய்கின்றனர்.

பிரதமர் மோடி சென்னைக்கு வந்து சென்ற மறுநாள், பாரதிய ஜனதாவின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் சந்தோஷ் கோவைக்கு வந்திருக்கிறார். அங்கு லீ மெரிடியன் ஓட்டலில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்ற முக்கியமான ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதுதான் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியினருக்குக் கொடுத்த கட்டளை என்பது அவர்கள் சொல்லும் அந்த ஆதாரத்துக்குரிய விஷயம்.

அப்படி அவர் அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். எல்லோரும் அவருடைய பேச்சை அப்படியே ஒப்பித்தார்கள்…

‘‘ஒரே நாள் பயணமாக பிரதமர் வந்து சென்று விட்டதால், அவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியினருக்கு என்ன தகவலைப் பரிமாறிச் சென்றார் என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. அப்படியொரு குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே சந்தோஷ்ஜியின் கோவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சந்தோஷ்ஜி, ‘அமித்ஷாவிடம் ஒரு முறை ‘உங்களுக்கு பாரதிய ஜனதாவில் கிடைத்த பெருமையாக எதைக்கருதுகிறீர்கள்’ என்று கேட்டபோது, ‘முதல் முறையாக கட்சியில் இரண்டு பூத்களுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்தார்கள். அதில் நான் பணியாற்றிய விதம்தான் என்னைப் படிப்படியாக இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆனால் அந்த பூத்களின் பொறுப்பாளர் பணியைத்தான் இந்தக் கட்சியில் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இன்று வரையிலும் அந்த பூத்கள் நமது கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருப்பதையே என்னுடைய பணியின் உண்மைக்குச் சான்றாக நினைக்கிறேன்’ என்று கூறினார். அதுபோல நீங்கள் ஒவ்வொருவரும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணி செய்ய வேண்டும்.தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு பூத்களிலும் பாஜகவைச் சேர்ந்த ஒருவராவது இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதுபற்றிய விபரங்கள் உங்களுக்கு விரைவில் வழங்கப்படும்என்று பேசிய சந்தோஷ்ஜியிடம் அதிமுக -அமமுக இடையிலான விவகாரங்களில் நாம் ஏதும் பங்கு வகிக்கிறோமா? இரு கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டிருக்கிறார்கள் சில நிர்வாகிகள்.

அவர்களுக்கு பதிலளித்த சந்தோஷ்ஜி ,‘அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுதான் நம்முடைய முடிவு. தமிழகத்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி; அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதேபோன்று நமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதிலும் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். அவரை முதல்வராக முன்னிறுத்தியே நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். அதை விடுத்து, அவர் ஊழல்வாதி, தவறான வழியில் பதவிக்கு வந்தவர் என்பது போன்ற எந்தக் கருத்தையும் எந்தத் தருணத்திலும் எங்குமே தெரிவிக்க வேண்டாம். இங்கே நடப்பது அத்தனையும் கட்சித்தலைமைக்கும் நன்கு தெரியும். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதும் எங்களுக்குத் தெரியும். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு இந்தக் கூட்டணியில் தொடர்வதுதான் கட்சித் தலைமை எடுத்துள்ள முடிவு. அதற்குக் கட்டுப்பட்டு எல்லோரும் கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்க வேண்டும். அதுவே நம்முடைய கட்சியின் எதிர்காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும்’

என்று சந்தோஷ் விரிவாகப் பேசினார்.

இதன்மூலமாக அதிமுக- அமமுக இணைப்பினை விரும்பாத எடப்பாடி பழனிசாமியின் முடிவை பிஜேபி தலைமை முழுமையாக ஆதரிப்பது தெரியவந்துள்ளது

.

**பாலசிங்கம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share