சுடுகாட்டில் அம்மா கிளினிக்: எடப்பாடி-மா.சு. காரசார விவாதம்!

Published On:

| By Balaji

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் 2000 அம்மா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால் ஏறத்தாழ 1900 அம்மா கிளினிக்குகள் தான் திறக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜனவரி 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அம்மா கிளினிக் என்பது தற்காலிக அமைப்பு, அது மூடப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று அதிமுக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் அம்மா கிளினிக் மூடப்படும் விவகாரம் தொடர்பாகக் காரசார விவாதம் நடந்தது.

ஒரத்தநாடு அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம், கிராமப்புறங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்த அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு மூடிவிட்டதாக புகார் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2000 கிளினிக்குகளில் 1,820 கிளினிக்குகளுக்குதான் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பல்வேறு இடங்களில் கழிவறைகள் மற்றும் மயானங்களைச் சீர் செய்து அம்மா கிளினிக்குகள் தொடங்கி நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டத் தயார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கழிவறைகளில் அம்மா கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுவது, இந்த திட்டத்தைச் சிறுமைப்படுத்தும் செயல் என்று கண்டனம் தெரிவித்தார். அதோடு அமைச்சர் கூறியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆதாரத்தோடுதான் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என்றார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் மா.சு, அம்மா கிளினிக்குகள் தற்காலிக அமைப்பாகத்தான் தொடங்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவ திட்டம் உள்ளதால், அம்மா கிளினிக் தேவையற்ற ஒன்றாகி உள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதன்பின் எதிர்க்கட்சித் தலைவர், அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது. ஒருவேளை அம்மா உணவகங்களை மூடினால், தண்டனையை அனுபவிப்பீர்கள் என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் பெயரிலிருந்த திட்டங்களை மூடியதால்தான் ஆட்சியை இழந்தீர்கள் என தெரிவித்தார்.

அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவக பணியாட்கள் குறைக்கப்பட்டு உள்ளார்கள். அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார். இதற்கு, “அம்மா உணவகம் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. மழை காலத்தில் கூட இலவச உணவு வழங்கப்பட்டது என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? கலைஞர் பெயரிலிருந்த எத்தனை திட்டத்தை நீங்கள் மூடியுள்ளீர்கள்” என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு அவையில் இன்று திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share