மத்திய அரசு மொழித் திணிப்பில் ஈடுபடுவதாக பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயது முதிர்வின் காரணமாக கடந்த 12ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குத் தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தேசிய அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உள் துறை அமைச்சர் அமித் ஷா எழுதிய கடிதம் மட்டும் சர்ச்சையாக மாறியது.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்குக் கடும் எதிர்ப்புகள் காட்டப்படும் நிலையில், முதல்வருக்கு இந்தி மொழியில் தனது இரங்கல் கடிதத்தை அமித் ஷா அனுப்பியிருந்தார். முதல்வருக்கு இந்தி தெரிந்திருந்தால், அமித் ஷா அனுப்பியதில் பிரச்சினையில்லை. இந்தி பேசாத மாநிலத்தில் உள்ள முதல்வருக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பாமல், இந்தியில் அனுப்பியதுதான் கடும் எதிர்ப்புக்கு காரணம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “அண்மைக் காலமாக தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகிறார்கள். தங்களுடைய முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதைக் காட்டுகிறது” என்று சாடியுள்ளார்.
நாங்கள் எழுதுவதைத்தான் தமிழர்கள் படிக்க வேண்டும் என்கின்ற இந்தி ஆதிக்க வெறி மனப்பான்மை, இந்தியாவைக் கூறுபோட்டு விடும் என்பதை, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய வைகோ, “எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையேல், இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழக முதல் அமைச்சரின் கடமை” என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழிலகத்தில் நேற்று (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும், திட்டக் குழுத் துணைத் தலைவருமான பொன்னையன், “உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் தாய்மொழி இந்தியே அல்ல. அவர் குஜராத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் கூட இந்தியில்தான் கடிதத்தை அனுப்புகிறார். அப்படியென்றால் எப்படிப்பட்ட வெறிச்செயலில் மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுகிறது என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு” என்று வலுவான எதிர்ப்பை பதிவு செய்தார்.
மேலும், “தாய்மொழியான தமிழையும், உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும் படிக்கிறார்கள். இந்தி வெறியர்கள் திணிக்கிற இந்தி மொழியையும் படிக்க வேண்டும் என்றால் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?” என்ற கேள்வியையும் பொன்னையன் முன்வைத்தார்.
**எழில்**�,