வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் வீட்டின் வைஃபையை ஆன் செய்ததும், இன்ஸ்டாகிராமில் சில குறிப்புகள் வந்து விழுந்தன.
‘இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் வழியாக ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படவேண்டும். ஆனால் ஆளுநர் மாளிகை இது தொடர்பாக பரிசீலனை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது. இதுகுறித்து தமிழக எம்பிக்கள் கட்சி பேதமின்றி திரண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டபோது அவர்கள் அமித் ஷாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதை ஒட்டித்தான் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட முடிவெடுக்க இன்று சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்’.
இந்த இன்ஸ்டாகிராம் குறிப்புக்கு வாட்ஸ் அப் பதிலை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி தனி செய்தியாக மின்னம்பலத்தில் வரும். பார்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் ஒரு மாநில அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதா ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இப்போதைய மோடி அரசு நள்ளிரவில் நிறைவேற்றும் சட்டங்களுக்குக் கூட அதிகாலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் செப்டம்பர் 19ஆம் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டம் பற்றி தமிழக ஆளுநர் மாளிகை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இப்படித்தான் கடந்த அதிமுக அரசில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்புச் சட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அப்போது அதுகுறித்து அதிமுக அரசு கேள்வியே எழுப்பவில்லை என்று விமர்சனங்கள் வெடித்தன.
ஆனால் இப்போதைய திமுக அரசு ஆளுநர் மாளிகைக்கு அதை அனுப்பி வைத்ததில் இருந்து நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆளுநர் மாளிகை பதிலளிக்காத நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவும் உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்திக்க முடியவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் நடக்காத அநீதி இது என்று தமிழக எம்பிக்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ஏன் அமித் ஷா இப்படி நடந்துகொள்கிறார் என்று உள்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த விவகாரத்தின் இன்றைய முனையை நீங்கள் பார்க்கிறீர்கள். இதன் இன்னொரு முனை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்தே தொடங்குகிறது என்றார்கள்.
2018, 2019 ஆகிய இரு வருடங்களிலும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க தமிழகம் வந்தபோதெல்லாம் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோ பேக் மோடி என்ற முழக்கம் ஆர்பாட்டத்திலும் ஆன் லைனிலும் முன்னெடுக்கப்பட்டது. 2018 இல் ராணுவ தளவாட கண்காட்சியை துவக்கி வைக்க தமிழகம் வந்த மோடிக்கு அப்போதைய திமுக தலைவர் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். உடல் நலம் குன்றி வீட்டில் இருந்தபோதும் தனது கோபாலபுரம் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றினார் கலைஞர். அதுமட்டுமல்ல… கறுப்பு சட்டை போட்டுக் கொண்டார் கலைஞர். தான் காலமாவதற்கு நான்கு மாதங்கள் முன்பு கூட அவர் மோடிக்கு எதிரான போராட்டங்களைக் கூர்மைப்படுத்தினார்.
கலைஞருக்குப் பின் திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினும் தமிழகத்துக்கு மோடி வரும்போதெல்லாம் கோ பேக் மோடி முழக்கத்தை தீவிரமாக முன்னெடுத்தார். ஆர்பாட்டங்கள் நடத்தினார். ஆன்லைனில் பல ஹேஷ்டாக்குகள் பாஜகவினரால் உண்டாக்கப்பட்டாலும், கோ பேக் மோடி உலக அளவில் டிரண்டிங் ஆனது.
இதை அப்போதும் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா ரசிக்கவில்லை. அவர் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மூலமாக தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி ஸ்டாலினிடம் பேசச் சொன்னார். ‘நீங்கள் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள். அது தமிழகத்தின் முக்கியப் பொறுப்பு வாய்ந்த பதவி.நாட்டின் பிரதமர் நம் மாநிலத்துக்கு வரும்போது இதுபோல எதிர்ப்பு தெரிவிப்பது பாதுகாப்பு ரீதியாக சரியல்ல. அதனால் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவியுங்கள். ஆனால் ஒரு மாநிலத்துக்குள் பிரதமரை விட மாட்டோம் என்ற அளவுக்கெல்லாம் போகவேண்டாம்’ என்றெல்லாம் அமித் ஷாவின் தூதர்களாக சில காவல்துறை உயரதிகாரிகள் ஸ்டாலினிடமே பேசினார்கள். ஆனால் அப்போது ஸ்டாலின் இதுகுறித்தெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் பின்னணியில்தான் 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் பதவியேற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்று பரவல் காரணமாக டெல்லி பயணத்தைத் தள்ளிப் போட்டார். அதன்படி ஒரு மாதம் கழித்து ஜூன் 17மாலை பிரதமர் மோடியை சந்தித்தார். ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சந்திக்க வேண்டிய கடமை அரசியல் சாசன ரீதியாக பிரதமருக்கு உள்ளது. அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் மோடி. ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சந்திக்க நேரம் கேட்டும் முதல்வருக்கு தரப்படவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவும் தமிழக முதல்வர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், ஜூன் 18 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கும் நேரத்தில் நிர்மலா சீதாராமன் நேரம் கொடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் ஏற்கனவே கொடுத்திருந்த நேரப்படி சோனியா, ராகுலை தன் மனைவி துர்காவுடன் சென்று சந்தித்துவிட்டு அப்போது டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் டெல்லி பயணத்துக்கு முன்பாகவே அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட்டுக்காக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சில முயற்சிகளை மேற்கொண்டார். அரசியல் ரீதியாக முயன்றும் முடியாத நிலையில் அமித் ஷாவுக்கு வேண்டப்பட்டவரான தமிழகத்தைச் சேர்ந்த கோர்ட் கிருஷ்ணமூர்த்தி என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி மூலம் அமித் ஷாவை தொடர்புகொள்ள முயற்சி எடுத்தார் சபரீசன். கிருஷ்ணமூர்த்தி அமித் ஷாவின் அரசியல் வாழ்வில் முக்கியமானவர். அமித் ஷாவுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்தவர். அதனால் கிருஷ்ணமூர்த்தி மீது அமித் ஷாவுக்கு எப்போதுமே பாசம் உண்டு. அதனால்தான், கிருஷ்ணமூர்த்தி மூலமாக அமித் ஷாவிடம் பேச முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படியே முதல்வரின் டெல்லி பயணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக தனி விமானத்தில் டெல்லி சென்றார் கிருஷ்ணமூர்த்தி. அவர் டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் உள்துறை அமைச்சக கார் அவரை ரிசீவ் செய்து அழைத்துச் சென்றது.
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த கிருஷ்ணமூர்த்தி, ‘இப்ப திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துட்டாங்க. அவங்க உங்களை சந்திக்க விரும்புறாங்க. முதல்வரோட மாப்பிள்ளை சபரீசன் சொன்னாலும் நான் மாநில அரசு, மத்திய இணக்கம் என்ற பப்ளிக் இன்ட்ரஸ்டோடதான் உங்ககிட்ட பேசுறேன். அவங்களே வந்து கேட்கும்போது முதல்வரை நீங்க சந்திக்கலாமே…’ என்று அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அப்போது அமித் ஷா, ‘நான் அவங்க எதிர்க்கட்சியா இருக்கும்போதே, பிரதமரை எதிர்த்து போராட வேணாம்னு அதிகாரிகள் மூலமா கேட்டுக்கிட்டேன். ஆனால் அவங்க அதைக் கேட்கலை. இப்ப ஆட்சி மாறினதும் சமரசத்துக்கு வர்றாங்களா? எனக்கு சந்திக்க விருப்பமில்லைனு சொல்லிடுங்க’ என்று சொல்லிவிட்டார்.
இதுதான் முதல்வரின் 2021 ஜூன் டெல்லி பயணத்திலும் எதிரொலித்தது. இப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்பிக்கள் சந்திக்க முயற்சி செய்தபோதிலும் அமித்ஷாவின் பழைய கோபமே இன்றும் நீடிக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். அதேநேரம் ஜனவரி 5 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்பியான கனிமொழிக்கு அமித் ஷா போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததும் திமுகவுக்குள் விவாதத்துக்குரியதாகியிருக்கிறது.
இந்த நிலையில்தான், முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே 110 விதியின் கீழ், ’நீட்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது’என்று தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
இதற்கிடையே வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல்கள் வந்தவுடனேயே அன்று பிரதமரை எதிர்க்கட்சியாக எதிர்த்த திமுக இன்று ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதே நிலைப்பாட்டைத் தொடருமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் திமுகவின் முக்கியஸ்தர்கள் பலர், திமுக தற்போது அரசாங்கத்தில் இருப்பதால் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமரை வரவேற்க வேண்டியது எங்கள் கடமை என்று கூறினார்கள். ஓமிக்ரான் தொற்று பரவலால் பிரதமரின் வருகையும் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கோபேக் மோடி கோஷத்தை திமுக அதிகாரபூர்வமாக கையிலெடுக்கவில்லை.
வெளியே கண்டனங்கள், அழுத்தங்கள் என தொடர்ந்தாலும் அமித்ஷாவின் பழைய கோபத்தை தணிக்க திமுகவின் முயற்சிகள் தொடர்கின்றன என்றே டெல்லி வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்ற வாட்ஸ்அப் செய்திக்கு சென்ட் கொடுத்ததும் ஆஃப் லைன் போனது வைஃபை.
�,”