சந்திக்க மறுத்த அமித்ஷா, ‘வாரிய’ செக்: பாஜகவிடம் சிக்கித் தவிக்கும் ரங்கசாமி

politics

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக, என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்துவரும் ரங்கசாமி, பாஜகவுக்கு வாரியத் தலைவர் பதவிகளை அதிக அளவில் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதியிலும் வெற்றி பெற்று, கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் காலம் நீண்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகுதான் என். ஆர். காங்கிரஸுக்கு முதல்வர் பதவி உட்பட மூன்று அமைச்சர் பதவிகளும் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ரங்கசாமி முதல்வர் பதவியேற்ற சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் பாஜக ரங்கசாமியிடம் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி துணை நிலை ஆளுநரால் பாஜக நிர்வாகிகள் மூன்றுபேருக்கு நியமன எம். எல். ஏ. பதவியை வழங்கினார்கள்.

முதல்வர் பதவியேற்று ஒரு வருடம் முழுமையாக முடியப்போகிறது, ஆனால் இது வரையில் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவில்லை ரங்கசாமி. கடந்த மாதம் 24ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வருகை தந்தவர் கட்சி நிகழ்ச்சி உட்பட ஐந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அமித்ஷாவை தனியாக சந்தித்து புதுச்சேரிக்கான கோரிக்கைகளை வலியுறுத்த நேரம் கேட்டார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் அமித்ஷா முதல்வருக்கே நேரம் கொடுக்கவில்லை.

வேறு வழியில்லாமல் மனம் நொந்துபோன ரங்கசாமி புதுச்சேரிக்கான கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை 5.00 மணிக்கு டெல்லி செல்ல புதுச்சேரி விமானம் நிலையம் சென்றபோது அங்கே சென்று சந்தித்து மனு கொடுத்தார். மேலும் விழாக்களிலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து மிகவும் நொந்து போயிருக்கிறார்.

மேலும் வாரியத் தலைவர்கள் விவகாரத்திலும் ரங்கசாமிக்கு கடுமையான செக் வைத்திருக்கிறது பாஜக.

“முதல்வர் ரங்கசாமியின் என் .ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகியோர் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக ரங்கசாமி ஒரு ஸ்டெப் எடுத்து வைத்தாலும் என் .ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்த்து முழு ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தயாராக இருக்கிறது பாஜக.

இதை அடிப்படையாகக் கொண்டு வாரிய தலைவர்கள் விவகாரத்தில் பெரும்பாலான வாரிய தலைவர்கள் பாஜகவினர் ஆகவே இருக்க வேண்டுமென்று முதல்வர் ரங்கசாமிக்கு நிபந்தனை விதித்துள்ளது பாஜக. இதன்படி புதுச்சேரியில் இருக்கும் 25 வாரியங்களில் 60% பாஜகவுக்கும் 40% என் .ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்க ரங்கசாமிக்கு உத்தரவிட்டுள்ளது பாஜக.

இப்படி ஒவ்வொரு நாளும் பாஜகவின் நிர்ப்பந்தங்களால் நொந்து போன ரங்கசாமி தனக்கு நெருக்கமான பாஜக நிர்வாகியும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் போன்றவர்களிடம், ‘நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் கேட்கிறேன். நீங்களே டெல்லி போய் நிதியைப் பெற்று ஆட்சியை நடத்துங்கள்’ என்று விரக்தியில் பேசியுள்ளார் முதல்வர் ரங்கசாமி. இப்படியே போனால் ஐந்து வருடங்களுக்குள் ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றி பாஜகவைச் சேர்ந்த ஒருவரே முதல்வர் ஆனாலும் ஆச்சரியமில்லை” என்கிறார்கள் புதுச்சேரி என். ஆர். காங்கிரஸ் வட்டாரத்தில்.

**வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.