ஆங்கிலத்துக்கு பதில் இந்தி: அமித்ஷா பேச்சின் பின்னணி அஜெண்டா!

Published On:

| By admin

நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் கூட்டம் நேற்று ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்த போது அதன் தலைவரான உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவுக்குள் வேறுபட்ட மாநிலங்கள் பிரதேசங்கள் தங்களுக்குள் உரையாடும் போது ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.

திமுகவின் செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன், ” இந்திக்கு மாற்றாக நாங்கள் ஆங்கிலத்தை தான் விரும்புகிறோம். இந்தி பேசாத அனைத்து மாநிலங்களுமே இந்திக்குப் பதிலாக ஆங்கிலம் இருப்பதையே விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்கிறார்கள்.
இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நல்லதல்ல.

நாங்கள் இந்தியை விட மிகமிகத் தொன்மையான தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றுள்ளோம். தமிழ் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொன்மை கொண்டது. ஆனால் இந்தி என்பது சமஸ்கிருதம், உருது, மற்றும் பிற மொழிகளின் கலவையாகும். இந்த நிலையில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்பதை எக்காலத்திலும் ஏற்க முடியாது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி, ” இணைப்பு மொழி என்று ஒன்றை திணிப்பது நாட்டை இணைக்க பயன்படாது. அது பிரிக்க தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை தியாகங்களை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா,
“ஒரு கன்னடர் என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இந்தி என்பது இந்நாட்டின் தேசிய மொழி அல்ல. இந்தியை எந்த ஒரு வேற்று மாநிலத்திலும் திணிக்க நடந்த முயற்சிகள் வெற்றி பெற்றதில்லை என்பதை சரித்திரம் தெளிவாகக் கூறுகிறது.
நாங்கள் கன்னடர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்.
அமித்ஷா காந்தி பிறந்த மாநிலத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவரது நடவடிக்கைகள் எல்லாம் சாவர்க்கரை போலவே இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் இது குறித்து தெரிவிக்கையில், “நாங்கள் இந்தியை ஒரு மொழியாக மதிக்கிறோம். ஆனால் இந்தி திணிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆங்கிலம் என்பது சர்வதேச மொழியாக இருக்கும் நிலையில், இந்திய அரசு மொழிக் கொள்கை விவகாரத்தில் தற்போதுள்ள நிலையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இந்தியா வெவ்வேறு மொழிகளைப் பேசும் வெவ்வேறு மாநிலங்களைக் கொண்ட நாடு. அமித்ஷா, தான் என்ன சொன்னோம் என்பதை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும். இந்தியைத் திணிப்பதில் காட்டும் அக்கறையை பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்பதில் காட்டலாம்” என்று கூறியுள்ளார்.

சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனிஷா கையாண்டே, ” அமித்ஷாவின் பேச்சுக்குப் பின்னால் இந்தியாவில் இருக்கும் மாநில மொழிகளையும் மாநில மொழிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள மாநிலக் கட்சிகளையும் சிதைக்கும் அஜெண்டா இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share