~அண்ணா சொன்னதுதான்: அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் பதில்!

Published On:

| By admin

ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று ஏப்ரல் 7 ஆம் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக இன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 9ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்திய அமைச்சரவைக்கான 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில் தான் தயாரிக்கப் படுகிறது என்றும் மற்ற மொழிகளைப் பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேசவேண்டும் என்றும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற ஆட்சி மொழி குழுவின் தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில் இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தித் திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார்.

நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றுவரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் பேரறிஞர் அண்ணா.

அண்ணாவின் இரு மொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார் பன்னீர்செல்வம்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share