பிப்ரவரி 28 நள்ளிரவு சுமார் ஒரு மணி வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நீண்ட ஆலோசனை நடத்தினார்.
மறுநாள் மார்ச் 1 ஆம் தேதி காலையில் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கட்சித் தலைமையிடம் இருந்து திடீர் ஆலோசனைக் கூட்டத்துக்கான அழைப்பு நடந்திருக்கிறது.
விருப்ப மனு கொடுக்கும் நிகழ்வு நடந்துகொண்டிருப்பதால், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் பலர் சென்னையில்தான் இருக்கிறார்கள். எனவே அவர்களில் பலர் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்.
தேர்தல் பணிகளை விரைவுபடுத்துவதற்கான இந்த ஆலோசனைக் கூட்டம் என்று வெளியே சொல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு அமித் ஷா, “நமது கூட்டணியில் அமமுக இடம்பெற வேண்டும்”என்று விதித்த நிபந்தனை பற்றி விவாதிப்பதற்கே இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் பேசினோம்,
“மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் அதிமுகவின் நிலைமை இப்போது கவலைக்கிடமாக உள்ளது. காரணம் அமமுகதான். குக்கர் சின்னம் அமமுகவுக்கு விரைவாக எளிதாக கிடைத்தபோதே அதிமுக தலைமைக்கு ஒரு டவுட் உண்டானது. அதன் காரண காரியங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி வருகின்றன.
தென் மாவட்டத்தில் இருக்கும் சுமார் 60 தொகுதிகளிலும் புதுக்கோட்டை, திருச்சி. தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிமுகவின் வெற்றியை தடுக்கும் அல்லது நிர்ணயிக்கும் வாக்குகள் அமமுகவிடம் இருக்கின்றன. இதை அறிந்துகொண்டுதான் அமித் ஷா அமமுகவை கூட்டணிக்குள் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.
அமித் ஷாவின் தொனியில் இருந்த உறுதியைப் பார்த்து சற்று அதிர்ச்சியாகித்தான் முதல்வர் எடப்பாடி மறுநாளே இந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கொங்குமண்டல நிர்வாகிகள், அமைச்சர்கள் அமமுகவை உள்ளே கொண்டுவர எதிர்த்திருக்கிறார்கள். ‘இத்தனை நாளும் நாம பேசிவிட்டு இப்ப தினகரனைச் சேர்த்தால் அதை மக்கள் ஒத்துக்க மாட்டாங்க. தவிர நாளைக்கு நாம ஜெயிசிட்டா கூட அவங்க எடப்பாடியார் முதல்வராக ஒத்துக்க மாட்டாங்க. இது தேவையில்லாத வேலை’ என்று எடப்பாடி பழனிசாமியின் மனசாட்சியாக கூறியிருக்கிறார்கள்.
அதேநேரம் தென் மாவட்ட அமைச்சர்களோ, ’வட மாவட்டத்துல வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தாச்சு. ஏற்கனவே தென் மாவட்டங்கள்ல முக்குலத்தோர் அமமுக பக்கம் இருக்காங்க. இப்ப சமீபத்துல தேவேந்திர குல வேளாளர் பொதுப் பெயர் மத்திய அரசு அறிவிச்சதால, தங்களுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் குறையுதுனு இங்க இருக்கிற முக்குலத்தோரும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அது களத்துல தெரியுது. அதனால அமமுகவை சேர்த்துக்கறது பெட்டர். அம்மா வழியில எல்லாரும் ஒண்ணாயிட்டோம்னு சொன்னா மக்கள் ஏத்துக்குவாங்க” என்று சொல்லியிருக்கிறார்கள்.
மதுரை நிர்வாகிகளுக்கும் கொங்கு நிர்வாகிகளுக்கும் இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மற்றபடி, “என்ன முடிவெடுத்தாலும் அதிமுக வரும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்” என்றே பலரும் வலியுறுத்தினார்கள். எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிந்துவிட்டது” என்றார்கள்.
**-வேந்தன்**
�,