டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வன்முறைக் கலவரமாக வெடித்ததில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கையில் இருப்பதால் அமித் ஷாவே கலவரத்துக்குப் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில்… கலவரத்துக்குப் பின் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் அமித் ஷா.
இன்று (பிப்ரவரி 28) ஒடிசாவில் நடந்த சிஏஏ ஆதரவுப் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாகவும், நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
“சிஏஏ மூலம் சிறுபான்மையினர் குடியுரிமையை இழக்க நேரிடும் என்பதாக பகுஜன் சமாஜ் கட்சி , சமாஜ்வாடி கட்சி, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் மம்தா ஆகியோர் ஏன் பொய் சொல்கிறார்கள்? சிஏஏ என்பது குடியுரிமையை வழங்குவதற்கான ஒரு சட்டம், இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. எந்த ஒரு இந்திய முஸ்லிமும் குடியுரிமையை இழக்க மாட்டார்” என்றார் அமித் ஷா.
நான் இன்று மீண்டும் இங்கு கூற விரும்புகிறேன், சிஏஏ நாட்டின் எந்த ஒரு முஸ்லீமின் குடியுரிமையைப் பறிக்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள்தான் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள். பொய் கூறுகிறார்கள். அதுதான் வன்முறையைத் தூண்டுகிறது” என்றார் அமித் ஷா.
**-வேந்தன்**�,”