பிரதமர் மோடியை நேற்று (ஜூலை 26) காலை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று (ஜூலை 27) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
கடந்த ஜூலை 25 ஆம் தேதி காலை ஓ.பன்னீர் செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து அன்று இரவு எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி.வேலுமணியும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பன்னீர், எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு முடிந்து அதிமுக பிரமுகர்களான தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பிரதமர் மோடியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல அவரை சந்தித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள், கோதாவரி காவிரி இணைப்பு, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு ஆகிய விஷயங்களை பிரதமரிடம் எடுத்துச் சொன்னோம்” என்றவரிடம்,
“அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சசிகலா கேட்டிருக்கிறாரே?”என செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது சட்டென பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் பழனிசாமி. பன்னீரும் எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லியில் காத்திருந்தனர் இருவரும். ஏற்கனவே அமித் ஷா அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தபோதும் கர்நாடகாவில் பாஜக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா, மிசோரம்- அஸ்ஸாம் மாநிலங்களின் எல்லை பிரச்சினை போன்றவற்றால் அமித் ஷா சில முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். அதனால் பன்னீர், பழனிசாமியை சந்திக்க அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவில்லை.
நேற்று இரவு சந்திக்க வாய்ப்பில்லாத நிலையில் இன்று (ஜூலை 27) காலை எடப்பாடி பழனிசாமி ஒன்றிய இணை அமைச்சர் முருகனை சந்தித்தார்.
இந்நிலையில் அமித் ஷா அலுவலகத்தில் இருந்து இன்று காலை அழைப்பு வர பன்னீர் செல்வமும், பழனிசாமியும் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் சந்தித்தனர்,
நேற்று பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனையில், அதிமுகவில் சசிகலா விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவித்தனர். மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு இன்று அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனையிலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் பேசப்பட்டிருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
**-வேந்தன்**
�,