_வாசனுக்காக அமித் ஷா கொடுத்த கடிதம்!

Published On:

| By Balaji

அதிமுக அணியில் ராஜ்யச பா உறுப்பினர் ஆகியிருக்கும் நிலையில்… முதல்வர் உள்ளிட்டவர்களை சந்தித்து நன்றி கூறியிருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். வாசனுக்கு சீட் அளிக்கப்பட்டதற்கு முழு காரணமும் பாஜகதான் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ஜி.கே.வாசன்.

இது தொடர்பாக அவர், “2019 மக்களவைத் தேர்தலின்போது அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்த கடைசி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்தான். மக்களவைத் தேர்தலின்போது எங்களுக்கு ஒரே ஒரே சீட் தான் வழங்கப்பட்டது. எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமில்லை, நோக்கம்தான் முக்கியம் என்று அப்போது சொன்னேன். ஆகவே, மற்ற தலைவர்களைப் போலவே நானும் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் எங்களுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். அந்த அடிப்படையிலேயே எங்களுக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

ராஜ்யசபா தேர்தலுக்காக என்னை ஆதரிப்பவர்கள் அனைவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான். பாஜக உள்பட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் அதிமுகவின் தேர்வு, அவர்களின் விருப்பம். மேலும் இதை அடிப்படையாக வைத்து பாஜகவுடன் தமாகா இணையும் என்றும் கூறி வருகிறார்கள் அது வடிகட்டிய பொய்” என்று வாசன் தெரிவிக்கிறார்.

அதேநேரம் அதிமுக வட்டாரங்களில் விசாரிக்கும்போது வேறு சில தகவல்கள் கிடைக்கின்றன.

“சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் இந்த நேரத்தில் மூன்று இடங்களையும் அதிமுகவினருக்கே கொடுக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். அதற்கான ஆலோசனையை அவர் நடத்தி வந்தார். மேலும் கூட்டணிக் கட்சி சார்பில் தேமுதிகதான், தமாகாவை விட அதிகமான அழுத்தம் கொடுத்து வந்தது. இந்த நிலையில் அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பிலேயே தமாகாவுக்கு ஒரு இடம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் என்று வேட்பாளரையும் அதிமுகவே அறிவிக்கிறது என்றால் இது அதிமுகவில் இயல்பானதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் டெல்லி சென்ற அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்தபோது வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு அதிமுகவுக்கு இது தொடர்பாக ஒரு கடிதத்தையும் அமித் ஷா கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் எடப்பாடி முடிவில் மாற்றம் ஏற்பட்டு வாசனுக்கு ராஜ்யசபா சீட் என்று அதிமுகவின் அறிக்கையிலேயே குறிப்பிடப்படுகிறது” என்கிறார்கள்.

பின், ஏன் இதில் பாஜகவுக்கு பங்கு இல்லை என்று வாசன் சொல்கிறார் என்று பாஜக வட்டாரத்தில் கேட்கப்பட்டபோது,

“வாசன் சொல்லும் காரணம் லாஜிக்காக இருக்கிறது. அதிமுகவுக்குதான் எம்,.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் தான் எம்.பி ஆக காரணம். ஆனால் சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, ‘என்ன வாசன் ஜி… வீட்டுக்கு வரவே மாட்டேங்குறீங்க? ஒரு நாள் வாங்க பேசுவோம்’ என்று வாசனை நேருக்கு நேராக அழைத்தார். இதில் இருந்தே பாஜகவிடம் வாசனுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன என்பதை அதிமுக அறிந்துகொண்டுவிட்டது.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை பலவீனப்படுத்துவதே பாஜகவின் முக்கிய வேலை. அதனால் சாத்தியமான மாநிலங்களில் எல்லாம் காங்கிரசுக்கு எதிராக, சோனியா குடும்பத்துக்கு எதிராக காங்கிரஸில் இருந்தே எதிர்த்து தனிக்கட்சி கண்டவர்களை ஊக்குவித்து வருகிறது பாஜக. அந்த வகையில் தமிழகத்தில் தமாகாவுக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்து காங்கிரசை பலவீனமாக்குவதே அமித் ஷாவின் அடிப்படை எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு. இது வாசனுக்கும் தெரியும். ஆனாலும் அவர் பாஜகவுடனான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இப்போது ராஜ்யசபா விவகாரத்தில் பாஜக பெயரை பயன்படுத்தவில்லை” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share