தமிழ்நாட்டில் ஒன்பதாம் முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா தாக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.
இந்நிலையில், இன்று(ஜூலை 27) சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியில் ”உயிர்கோள அடர்வனம்” திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு ஆயிரமாவது மரக்கன்றை நட்டார். மாணவர்களின் சாகசங்களை பார்வையிட்டவர், திருவள்ளுவர் சிலைக்கும், அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,”தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து தமிழ்நாடு அரசு புதிதாக வெளியிட்ட சுற்றறிக்கையில் உள்ளபடி மாணவர்களிடம் 75 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டெட் தேர்வு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் வெயிட்டேஜ் முறை படி ஆசிரியர் தேர்வு எளிதாக நடைபெற்றிருக்கும். இப்போது இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதுதொடர்பான, ஒவ்வொரு அரசாணையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சிஸ்டம் கொண்டுவரப்படுகிறது. இவை அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேம்.
கல்வி துறையில் ஆசிரியர் பணிக்கு வரவேண்டுமென்றால், இந்த வழிமுறையைதான் பின்பற்ற வேண்டும் என்ற ஒரே நெறிமுறையை கொண்டுவர வேண்டும். கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு ஆசிரியர் தேர்வு நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி மூலம் ஆசிரியர் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பாக மருத்துவ வல்லுனர்கள் உடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம். பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதைவிட கூடுதலாக, விரிவாக, முதல்வர் ஆலோசனை நடத்துவார்.அப்படி பள்ளிகளை திறக்க அனுமதி கிடைத்தவுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,