அமெரிக்காவின் அடுத்த ட்ரோன் தாக்குதல்: ஆப்கன் குழந்தைகள் பலி!

Published On:

| By Balaji

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து முற்று முழுதாக அமெரிக்கா புறப்படத் தயாராகும் நிலையில், கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது ஆளில்லா ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடந்த ஆகஸ்டு 26 ஆம் தேதி மாலை காபூல் விமான நிலைய வாசலிலும், அருகில் ஓரிடத்திலுமென இரு இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்காவுடன் தலிபானின் இணக்கப் போக்கைக் கண்டித்து இந்த தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் (கே) என்ற பயங்கரவாத அமைப்பு அ அறிவித்தது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், தலிபான் படையினரோடு அமெரிக்க படையினரும் பலர் இறந்தனர். இதனால் கோபமான அமெரிக்கா அடுத்த நாள் ஆகஸ்டு 27 நள்ளிரவு ஆகஸ்டு 28 அதிகாலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். (கே) பயங்கரவாதிகள் இருவரை ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்கிக் கொன்றது.

இதையடுத்து ஆகஸ்டு 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காபூல் விமான நிலையம் அருகே இன்னொரு ஆளில்லா ட்ரோன் தாக்குதலையும் அமெரிக்கா நடத்தியது. காபூல் விமான நிலையத்தின் மீது மேலும் தாக்குதல் நடத்தும் வகையில் வாகனங்களில் வெடிபொருட்கள் முழுதாக நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்டுபிடித்த அமெரிக்கா அந்த வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தி வெடிபொருட்களை அழித்தது என்று அமெரிக்க தரப்பு கூறுகிறது.

ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வடக்கே நேற்று மாலை ஒரு பெரிய குண்டுவெடிப்பு அதிர்ந்ததாக கண்ணால் பார்த்தவர்கள் சாட்சிகள் தெரிவித்தனர், மேலும் தொலைக்காட்சி காட்சிகள் வானில் கருப்பு புகை எழும்புவதை காட்டின.

அமெரிக்க அதிபர் ஜோ பிடென் ஆகஸ்டு 28 ஆம் தேதி, காபூலில் அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் மற்றொரு தீவிரவாத தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக அவரது ராணுவத் தலைவர்கள் கூறியதாகவும் எச்சரித்தார்.

குறிப்பாக அமெரிக்க துருப்புக்கள் புறப்படும் போது விமான நிலையத்தை தாக்குவதற்கு ஐ.எஸ். (கே) அமைப்பினர் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கா அறிந்தது. இந்நிலையில்தான் வியாழக்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக டெலவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்திற்கு பிடன் சென்ற நேரத்தில், சரியாக காபூலில் நேற்று ட்ரோன் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் பயங்கரவாதிகளின் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் அழிக்கப்பட்டதாக அமெரிக்க கூறினாலும்… இத்தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்று காபூல் உள்ளூர் செய்திகளை மேற்கோள் காட்டி தி கார்டியன் தெரிவிக்கிறது.

இப்போது வரை காபூல் விமான நிலையத்திலும் அதைச் சுற்றிலும் 5.800 அமெரிக்க படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share