மக்கள் நீதி மய்யம் எம்.எல்.ஏ.க்கள் வாக்குறுதியை செய்யத் தவறினால் ராஜினாமா செய்துவிடுவார்கள் என கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் முதற்கட்ட பிரச்சாரத்தை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக்குவேன் என்ற வாக்குறுதியை அளித்தார். அதன்பிறகு இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம், டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாப்பாரப்பட்டியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்று பேசுகிறார்கள். அதை நிராகரித்துக் காட்டுங்கள். நான் இங்கு பார்க்கும் முகங்கள் எல்லாம் நாளை நமதே, நாளை நமதே என்று சொல்கிறது என்றார்.
தமிழகத்தைச் சீரமைக்க வரலாறு உங்களுக்குக் கொடுத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு இது என்றவர், அதைப் பயன்படுத்துங்கள். இது இளைஞர்களின், மகளிரின் கட்சி. மாண்புமிகு என்ற பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் ஊழியர்கள் என்ற அடிப்படையிலேயே வந்திருக்கிறோம் என்று கூறினார்.
மேலும், “நாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை நீங்கள் வெற்றிபெறச் செய்த பின்னர், அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தாமதப்படுத்தினால் அல்லது நிறைவேற்றாவிட்டால் அவரின் ராஜினாமா கடிதம் என்னிடம் இருக்கிறது. அவர்கள் ராஜினாமா செய்வார்கள்” எனவும் வாக்குறுதி அளித்தார்.
**எழில்**�,