தமிழ்நாடு முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முதல்வர்களின் வாகனங்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதுபோன்றுதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் 12 பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். சென்னையில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் நேரங்களில் மற்ற சாலைகள் மூடப்பட்டு பொதுமக்கள் காக்க வைக்கப்படுவார்கள். இதனால் பெரிய அளவில் டிராபிக் ஏற்படுவதும் உண்டு.
அதுபோன்றுதான், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்தநாளின் போது முதல்வர் வாகனம் செல்வதற்காக பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் மாட்டிக் கொண்டார். டிராபிக்கில் 15 நிமிடம் காத்து இருந்ததால், தன்னுடைய பணி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கண்டனம் தெரிவித்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையானது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காவல் துறைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, முதல்வரின் கான்வாய் வாகனங்கள் 12இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உள்துறைச் செயலாளர் பிரபாகரை நேற்று (அக்டோபர் 20) நேரில் வரவழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, உள்துறை செயலாளர் பிரபாகர், முதல்வரின் கான்வாய் 12 வாகனங்களில் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எதிரில் வரும் வாகனம் நிறுத்தப்படுவது இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய நீதிபதி, நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வேண்டாம். யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. அடுத்த நாளே இதுதொடர்பாக போக்குவரத்தைச் சீரமைத்ததற்கு நன்றி. இந்த நடவடிக்கையால் நீதிபதிகள் மட்டுமல்ல; பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர்,
டிஜிபி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதி, முதல்வரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
**-வினிதா**
�,