தமிழகத்தில் தாமரையை மலர வைப்போம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய நடிகை குஷ்பு, அடுத்த சில மணி நேரத்தில் டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜகவுக்கு எதிராக 5 நாட்களுக்கு முன்பு வரை குரல் கொடுத்து வந்த குஷ்பு, பாஜகவில் இணைந்தது விவாதப் பொருளாக மாறியது. அவரது கணவர் சுந்தர்.சி வற்புறுத்தலின் பேரில்தான் அவர் பாஜகவில் இணைந்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
பாஜகவில் இணைந்த பிறகு இன்று (அக்டோபர் 13) சென்னை வந்த குஷ்புவுக்கு, தமிழக பாஜக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சென்னை கமலாலயம் வந்தவர், அங்குச் செய்தியாளர்களை சந்தித்தார்.
”பாஜகவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இன்னமும் பெரியாரிஸ்டுதான். தந்தை பெரியார் காங்கிரஸை எதிர்த்தவர்தானே. நான் காங்கிரஸில் இருந்தபோது பெரியாரிஸ்டான நீங்கள் ஏன் காங்கிரஸில் இருக்கிறீர்கள் என யாரும் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஏன் கேட்கிறார்கள். பெண்களுக்கும், தலித் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார் பெரியார். பாஜகவிலும் தலித் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்றுதானே நினைக்கிறார்கள்” என்று விளக்கினார்.
தமிழக காங்கிரஸிலிருந்து என்னை எந்தக் கூட்டத்திற்கும் அழைப்பதில்லை. டெல்லி மேலிடம் அழைத்ததால் 5ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். இருக்கிற இடத்தில் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சென்றேன். காங்கிரஸில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பாஜகவை விமர்சித்தேன் என்றவரிடம், ஷூட்டிங்கில் இருந்ததால் கூட்டங்களுக்கு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் வைக்கிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“தங்களது தவறுகளை மறைப்பதற்காக இவ்வாறு கூறுகிறார்கள். அண்ணாத்த படத்தில் கடந்த வருடத்தில் 20 நாட்கள் நடித்தேன். அதிலும் மாதத்திற்கு 5 நாட்கள் என்று ஒதுக்கி நடித்தேன். மீதம் 25 நாட்கள் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்தேன். அந்த 25 நாட்களில் காங்கிரஸ் கூட்டமே நடத்தவில்லையா? என்னை வைத்து கூட்டம் கூட்டும்போது நான் நடிகை என்று அவர்களுக்குத் தெரியவில்லையா? நான் நடிகைதான். அவர்கள்தான் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 2 ரூபாய் வாங்கிக் கொண்டு என்னைப் பற்றிய வதந்தி ட்விட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான்” என பதிலளித்தார்.
மேலும்,“நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. எனது கணவருடன் எந்த நிகழ்ச்சியிலாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் மீது உள்ள கனத்தை மறைக்க எனது கணவர் மீது பழிபோடுகிறார்கள். எனது அரசியலுக்கு சுந்தர் சி காரணம் எனக் கூறக்கூடாது” என்று மறுப்பு தெரிவித்த குஷ்பு, தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலரும் என்று குறிப்பிட்டார்.
**எழில்**�,