இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனவே தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளைத் தனி அலுவலர்கள் நிர்வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களது பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது டிசம்பர் 31ஆம் தேதி வரை தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி என விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலைச் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும், இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று முதல்வர் எங்கள் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதுபோன்று விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.
சென்னை புறநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
**-பிரியா**
�,