c
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1,2,3, ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை ரேஷன் கடைகள் இயங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்களில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்ப்பது குறித்து கடந்த அக்டோபர் 11ஆம் தேதி உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை கூடுதலாக நான்கு மணி நேரம் நீட்டித்தும், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கத் தேவையான பொருள்களை இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. அதுபோன்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இன்று(அக்டோபர் 14) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து ரேஷன் கடைகள் இயங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான பொருட்களை நவம்பர் மாதத்துக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,