அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: முதல்வர் ஸ்டாலின்

politics

எதிர்க்கட்சியினர் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று விமர்சித்து வரும் நிலையில், கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்குச் சென்றார். நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளையும் தொடங்கிவைத்தார்.

ஒகேனக்கல் யானை பள்ளத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை விளக்கும் மாதிரி வடிவமைப்பினையும் பார்வையிட்டார்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இது தவிர 17.44 கோடி ரூபாய் மதிப்பிலான 11 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 100 சதவிகித கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக, கிருஷ்ணாபுரம், வெள்ளோலை, கடகத்தூர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் மலைவாழ் மக்கள் , விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பழங்குடியினத்தை சார்ந்திருக்கக்கூடிய மக்களை சந்தித்து, உங்களுடைய கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.

எங்களுக்கு இது ஒரு மறக்க முடியாத நாள், எங்களைத் தேடி நீங்கள் வந்திருக்கிறீர்கள், அதற்காக நன்றி சொல்கிறோம் என்று இங்கே பேசியவர்களெல்லாம் குறிப்பிட்டுச் சொன்னீர்கள். உள்ளபடியே உங்களைப் பார்க்கும்போது நான் அதிகமாக மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய கோரிக்கைகளை நீங்கள் எடுத்துச் சொன்னீர்கள்.

பணம் இருப்பவர்கள் மட்டும்தான் மருத்துவமனைக்குப் போகமுடியும் என்ற சூழ்நிலை இருந்து வந்தது. அதை இன்றைக்கு, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மாற்றிக் காட்டியிருக்கிறோம். நம்முடைய ஆட்சியில். காசு, பணம் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர இயலாத அளவுக்குப் பாதிக்கப்பட்டவர்களையும் குணப்படுத்திக் கொண்டு வருகிறோம்.

கொரோனாவால் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். அப்படிப்பட்ட கொரோனாவை, தமிழகத்தில் முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்லமாட்டேன், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். இதுவே ஒரு மிகப் பெரிய சாதனையாக இன்றைக்கு எல்லோராலும் பேசப்படுகிறது. ஒரு பக்கம் மருத்துவ நெருக்கடி, இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி, இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகளையும் படிப்படியாக நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றிக் கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

முக்கியமாக ஆதிதிராவிடர் பழங்குடி ஆணையம் அமைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். இத்தகைய ஆணையத்தை அமைத்து அதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து, சட்டமன்றத்தில் அதை சட்டமாக்கியிருக்கிறோம். மிக விரைவில் அதற்குரிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அந்த ஆணையம் சொல்லக்கூடிய ஆலோசனைகளையெல்லாம் பரிசீலித்து நிச்சயமாக அவற்றையும் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

சாலை வசதிகளைப் பற்றி சொன்னீர்கள், போக்குவரத்து வசதிகளைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். மகளிர் சுய உதவிக் குழுவைப் பற்றி கூட சில சகோதரிகள் இங்கே பேசினர். திமுக ஆட்சி இருந்தபோதுதான், கலைஞர் முதன்முதலில் மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தார். அதுவும் தர்மபுரி மாவட்டத்தில்தான் ஆரம்பித்தார் என்பது வரலாறு.

அந்த மகளிர் சுய உதவிக் குழுவிற்கு மானியத் தொகை, வங்கிக் கடன், சுழல் நிதி வங்கிக் கடன், மானியம் இதையெல்லாம் நேரடியாகவே நானே சென்று, அவர்களுக்கு வழங்கினேன்.

ஒவ்வொரு விழாவிலும், அரசு விழாவிலும் அந்த நிகழ்ச்சியை இணைத்துக்கொண்டு நடத்தினேன். 4000 பேர் வந்தாலும் சரி, 400 பேர் வந்தாலும் சரி, 4 பேர் வந்தாலும் சரி அனைவருக்கும் அவர்கள் கையில் நானே என் கையால் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறேன். மீண்டும் அதற்கு புத்துணர்வு ஏற்படுத்தி, மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுவிற்குக் கம்பீரமாக இன்றைக்கு அவர்கள் நடமாடக்கூடிய வகையில் ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்.

மகளிர் சுய உதவிக்குழு எதற்காகத் தொடங்கப்பட்டதென்றால், பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும், தன்மானத்துடன் வாழ வேண்டும், சுய மரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது. அந்த சுய உதவிக் குழுவிற்கு மீண்டும் புத்துணர்வு ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் முகத்தைப் பார்க்கும்போது, எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகிறது. எனவே, அந்த நம்பிக்கையோடு உங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கான எல்லா வசதிகளையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0