இந்தியாவுக்கு தற்கொலை தாக்குதல் எச்சரிக்கை விடுத்த அல்கொய்தா!

Published On:

| By admin

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு, இந்தியா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 27ஆம் தேதி ஞானவாபி மத வழிபாட்டு தளம் தொடர்பாக நடந்த ஒரு விவாதத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார்.

அந்த விவாதத்தில் சிவலிங்கத்தைப் பற்றி ஒரு நபர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நுபுர் ஷர்மா தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமிய கடவுளின் இறைத்தூதரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக பாஜக கட்சிக்கு பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு, இந்தியா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அல்கொய்தாவின் கடிதத்தில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “நபிகள் நாயகத்தின் கண்ணியம் காப்பதற்காக நாம் போராட வேண்டும். இந்தியாவை இந்துத்துவா தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். நமது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அனைவரையும் நாம் கொல்ல வேண்டும். டெல்லி மும்பை குஜராத் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் முடிவுக்காக தயாராக இருங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தற்கொலை தாக்குதல் எச்சரிக்கை முன்னிட்டு உளவுத்துறை மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் தகவல்களை தெரிவித்து, முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share