Zமுதல்வரை பாராட்டிய குமரி அனந்தன்

Published On:

| By Balaji

ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யப்படுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில்100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என்ற வகையில் பனை வெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று(அக்டோபர் 23) நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேஷன் கடைகளில் கற்பகம் பிராண்ட் பனை வெல்லம் விற்பனை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும்,காந்தி பேரவை தலைவரும், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், நிகோடினிக் ஆசிட் என்ற B 3 யும், அஸ்கார்பிக் ஆசிட் என்ற C வைட்டமினும் இருக்கின்றன. இவை மனித உடல் வளர்ச்சிக்கு மிக தேவையானவை. ரேஷன் கடைகள் மூலம் இவை எல்லா மக்களையும் சென்றடைந்து விடும்.

இதேபோல் வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்களாகும். இவற்றிற்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன். இயற்கையோடு இணைந்து மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்கிச்செல்லும் செயல்களாகும்.

தமிழ்த்தறி என்ற தலைப்பில் ஆரணி, சேலம், கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய ஊர்களில் நெய்யப்படும் புகழ்பெற்ற, பாரம்பரிய பட்டுச்சேலைகளும், ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியவை விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் போற்றுகிறேன்.

இந்த முயற்சிகளை தமிழ்நாடு முதல்வர் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சயம் உயர்நிலைக்கு செல்கிற வாய்ப்பு ஏற்படும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வரை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share