கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி, திங்கட்கிழமை டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங் நடத்தினார். கூட்டத்தில் டிசி மற்றும் எஸ்பி முதல் டிஜிபி அந்தஸ்து வரையில் அனைத்து ஐபிஎஸ் ஆபீஸர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டிஜிபி, “கடலூர் மாவட்டத்தில் ஒரு இறப்பு நடந்துள்ளது. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் மல்ட்டிபிள் ஃபிராக்சர் என்று இருக்கிறது. அது கொலையா, இல்லையா என்று தெரியாமல் வைத்திருக்கிறார்கள். ஐஜி கேட்டால் ஐஜிக்குத் தெரியலை. டிஐஜிக்கும் தெரியலை. எஸ்பிக்கும் தெரியலை என்கிறார்கள்” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார்.
இதையடுத்து கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தனக்கு கீழே பணிபுரியும் ஓர் அதிகாரியிடம், “என்ன நடக்கிறது? ஒரு மாசமா விசாரிக்கிறீங்க? கைது செய்ய யோசிக்கிறீங்களா? டிஜிபி என்னைக் கடுமையாகத் திட்டுகிறார்? ஏன் கைது செய்யலை?” என்று சத்தமாகப் பேசி லைனைத் துண்டித்துவிட்டார்.
டிஜிபி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அந்த விவகாரம் பற்றி கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
“குறிஞ்சிப்பாடி வட்டம் புலியூர் காட்டுச்சாகை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்) கடந்த ஆண்டு 2020 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி, சந்தேகத்திற்குள்ளான வகையில் இறந்துவிட்டார்.
அது சம்பந்தமாக செல்வம் மனைவி விஜயஸ்ரீ குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில், ‘சமுட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏகேஎஸ் என்கின்ற சுப்பிரமணியன், பூவராகவமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள், கந்துவட்டி கேட்டு மிரட்டிக் கட்டி வைத்து என் கணவரை அடித்துள்ளனர். அதனால்தான் அவர் இறந்துவிட்டார்’ என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார். அப்போதிருந்த அதிமுக ஆட்சியில் இந்த புகார் பற்றி போலீஸ் ஆர்வம் காட்டாமல் விட்டுவிட்டார்கள். அப்போதிருந்த எஸ்பி அபினவ்ஸ்ரீயும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
ஆட்சி மாறிய பிறகு 2021 ஜூலை மாதம் 17ஆம் தேதி, இறந்துபோன செல்வத்தின் மனைவி விஜயஸ்ரீ கடலூர் எஸ்பிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘என் கணவர் செல்வம் கடலூர் புதுநகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பூ மார்க்கெட்டில் எஸ்விஎஸ் என்ற பெயரில் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் பூக்கடை நடத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் எனது கணவர் கடந்த 19.8.2020 அன்று சந்தேகத்திற்குள்ளான வகையில் இறந்துவிட்டார். ஏ.கே. சுப்பிரமணியன், ஏ.கே.பூவராகமூர்த்தி மற்றும் அவருடைய அடியாட்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர். எனது கணவர் இறந்த பிறகுதான் மேற்கண்ட சம்பவத்தைப் பற்றி, எங்கள் ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவர் எனக்குத் தகவல் தந்தார். நான் உடனடியாக எனது கணவரின் இறப்பில் உள்ள சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
புகாரின் அடிப்படையில் எனது கணவரின் உடலை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். எனது கணவர் அடித்துத்தான் கொல்லப்பட்டார் என்று பிரேதப் பரிசோதனை முடிவு வந்துள்ளதாக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் திருமதி சத்யபாமா எங்கள் வீட்டிற்கு வந்து தெரிவித்தார்.
மேற்கண்ட ஏ.கே.சுப்பிரமணியன், ஏ.கே.பூவராகமூர்த்தி மற்றும் அவருடைய அடியாட்கள் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முக்கியமாக குள்ளஞ்சாவடி பகுதிகளில் ஃபைனான்ஸ் தொழில் செய்வதுபோல்… கடலூர் வியாபாரிகள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்குப் பணத்தைக் கந்துவட்டிக்குக் கொடுத்துவிட்டு கந்துவட்டி வசூலிப்பார்கள். இல்லை என்றால் அடித்து மிரட்டி சொத்துகளை எழுதி வாங்குவார்கள்.
என் கணவர் கொலைக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. குள்ளஞ்சாவடி காவல் நிலையம் சென்றால் இன்று வா நாளை வா என்று அலைக்கழித்து வருகிறார்கள்’ என்று மூன்று பக்கத்திற்குப் புகார் கொடுத்திருந்தார் எஸ்பியிடம்.
கடலூர் எஸ்பி, அந்த கொலை புகாரை நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரனிடம் அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருந்தார். அவர் தொழில் நுட்ப ரீதியாகவும், நேரடியாகவும் சென்று சுமார் ஒரு மாதம் காலமாக விசாரித்துவிட்டு குற்றவாளிகளை முடிவுசெய்தவர், எஸ்பி சக்தி கணேசனிடம் முழு தகவல்களையும் ரிப்போர்ட் ஆக அளித்தார். குற்றம் செய்தவர்களில் ஒருவர் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர் என்றும் தகவல் கொடுத்தார். ‘யாராக இருந்தால் என்ன? அரஸ்ட் பண்ணுங்க’ என்று உத்தரவு கொடுத்தார் எஸ்பி சக்தி கணேசன்.
டிஎஸ்பி தனிப்படை கடந்த 2021 டிசம்பர் 22ஆம் தேதி, காலையில் பூவராகவன் மற்றும் அமிர்தலிங்கம் இருவரையும் பிடித்தனர். நெய்வேலி டிஎஸ்பி அலுவலகத்துக்கு அழைத்துவந்து சிறைக்கு அனுப்ப ரிமாண்ட் பாண்ட் எழுதி தயாராக வைத்துவிட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான தகவலுக்காகக் காத்திருந்தனர். அன்று மாலை நேரத்தில் எங்கிருந்தோ வந்தது ஒரு போன் கால். அவ்வளவுதான் பிடிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிகளுக்கு சல்யூட் அடித்துவிட்டு வெளியில் அனுப்பி வைத்துவிட்டார்கள்” என்று விளக்கிய போலீஸ் வட்டாரத்திடமே, அந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தி அவர்களை விடுவித்தது யார் என்றும் விசாரித்தோம்.
“குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வேளாண் துறை அமைச்சரும் திமுக கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்து உதவி கேட்டுள்ளார்கள். அவர் இதுபோன்ற வழக்கில் நான் தலையிடமுடியாது என்று திருப்பி அனுப்பி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அமைச்சர் ஆதரவாளர்கள். அதன் பிறகு எஸ்பி சக்தி கணேசன், அமைச்சரைத் தொடர்புகொண்டு விவரங்களைச் சொல்ல, எது நியாயமோ அதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார் அமைச்சர்.
அடுத்தாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரனை கைப்பேசியில் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார்கள். அமைச்சரிடம் பேசிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உடனே சபாவும், ’கொலை வழக்கில் நான் யாரிடமும் பேசமுடியாது. உங்களுக்கே தெரியும் எம்பி ரமேஷையே கைது செய்துவிட்டார்கள்’ என்று லைனைத் துண்டித்துவிட்டார்.
இந்த நிலையில்தான் யாரோ ஒரு பவர்ஃபுல் போலீஸ் அதிகாரி, தன் மீது கறை படியாமல் காய் நகர்த்தி, பெரிய இடத்திலிருந்து சொல்லிவிட்டதாக தப்பிக்க வைத்துவிட்டார்கள்” என்கிறார்கள் எஸ்பி அலுவலகத்தில் உள்ளவர்கள்.
கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி ரமேஷையே… கொலை வழக்கில் கைது செய்த போலீஸார், சாதாரண ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்து தப்பிக்கவிட்டதற்கு யார் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய கடலூர் அரசியல் வட்டாரத்தின் முக்கிய விவாதம். இத்தனைக்கும் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸாரின் கந்துவட்டி பட்டியலில் ஏற்கனவே இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் நடந்த இந்தக் கொலைக்கு திமுக ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்று காத்திருக்கிறார் அந்த அபலைப் பெண். குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டதில் பலர் ஆதாயம் அடைந்திருப்பதாகவும் அனைத்து தகவல்களும் முதல்வர் கவனத்திற்கும் சென்றுள்ளது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்திலேயே!
**-வணங்காமுடி**
�,”