�ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? : முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்

Published On:

| By Balaji

நீட் தேர்வின் தாக்கம் குறித்த அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு நீட்தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வு தமிழகத்தில் அமலில் உள்ளதால் மாணவர்கள் அதற்குத் தயாராக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

இதனிடையே நீட் தேர்வின் தாக்கம் மற்றும் மாற்றுவழி குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவைத் தமிழக அரசு கடந்த ஜூன் 10ஆம் தேதி அமைத்தது.

இந்த குழு, நீட் தேர்வு தொடர்பாகச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களைக் கடந்த ஜூன் 23ஆம் தேதி வரை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு மீண்டும் நேற்று ஆலோசனை நடத்தியது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நீதிபதி, நீட் தேர்வு வேண்டாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து வகையான கருத்துகளும் வந்துள்ளது. ஒவ்வொரு கருத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்குப் பிறகு எது நல்லது என்று பார்த்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இதுவரை 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் ஆதரவு தெரிவித்தார்கள் எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை வெளியில் சொல்ல முடியாது. ஒரு சிலர் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் நீட் தேர்வை வைக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களின் சொந்தக் கருத்து. அதைத் தவறு என்று கூற முடியாது.

ஒரு மாத காலத்துக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய முயல்கிறோம். முடியாவிட்டால் சிறிது காலம் கூடுதலாகத் தேவைப்படலாம். எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பதை இப்போதே கூற முடியாது. மீண்டும் ஜூலை 5ஆம் தேதி மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மீதான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share